பிரதமர் நரேந்திர மோடி தனது 69ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இன்று தனது தாயார் ஹீராபென் மோடியின் ஆசிபெற்று பிறந்தநாளைத் தொடங்கியுள்ளார். அதனைத் தொடர்ந்து, நர்மதை மாவட்டத்தில் உள்ள கேவடியா என்னுமிடத்தில் உள்ள சர்தார் சரோவர் அணை, 138.68 மீட்டர் என்ற அதன் முழுக் கொள்ளளவை எட்டுவதை பார்வையிட்டார். இந்த அணை முதன்முறையாக இன்றுதான் தனது முழுக்கொள்ளளவை எட்டுகிறது.
அதனைத் தொடர்ந்து, அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பிரதமர் உரையாற்றுகிறார். இக்கூட்டத்தில் சுமார் 10 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவரின் வருகையையொட்டி அணையானது வண்ண விளக்குகளால், அலங்கரிக்கப்பட்டது. இதற்காக நேற்று இரவு, மோடி அவரது சொந்த ஊரான குஜராத் மாநிலம் அகமதாபாத் நகருக்கு வந்தார். அவருக்கு, விமான நிலையத்தில் மாநில ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத், அம்மாநில முதலலைச்சர் விஜய் ரூபானி, மாநில அமைச்சர்கள் சிறப்பு வரவேற்பு அளித்தனர்.
இந்திய அளவில் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள் வாழ்த்து முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.