மும்பை: அடுத்த மூன்று மாதங்களில் மகாராஷ்டிராவில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று மத்திய அமைச்சர் ராசகேப் தன்வே கூறியதற்கு சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தக்க பதிலடி கொடுத்தார்.
"கடந்த ஆண்டு பாஜக ஆட்சியமைத்த மூன்று நாள் அரசின் நினைவு தினம் இன்று. எங்கள் அரசு நான்கு ஆண்டுகளையும் நிறைவு செய்யும். எதிர்க்கட்சிகளின் முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்துள்ளதால் அக்கட்சியின் தலைவர்கள் இதுபோன்ற கருத்துக்களை தெரிவிக்கின்றனர். மகாராஷ்டிரா மக்கள் இந்த அரசுடன் தான் இருக்கின்றனர்" என்று சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்தார்.
மகராஷ்டிராவில் நேற்று (நவம்பர் 24) நடந்த பாஜக நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மத்திய அமைச்சர் ராசகேப் தன்வே, அடுத்த இரண்டு, மூன்று மாதங்களில் பாஜக மீண்டும் மகாராஷ்டிராவில் ஆட்சிக்கு வரும் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பாஜக-சிவசேன கூட்டணி உடைந்து, தேசியவாத காங்கிரசுடன் கூட்டணி வைத்த பாஜக, பதவியேற்ற 80 மணி நேரத்திலேயே அந்த அரசு ராஜினாமா செய்தது. 2019ஆம் ஆண்டு நவம்பர் 24ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை மகாராஷ்டிர மாநில முதலமைச்சராக பட்னாவிஸ் இருந்தார். இதனையடுத்து, சிவசேனா -காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி இணைந்து ஆட்சியமைத்தது. தற்போது, மகாராஷ்டிராவின் முதலமைச்சராக உத்தவ் தாக்கரே இருந்து வருகிறார்.
இதையும் படிங்க: சாதிக்கத் துடிக்கும் உணர்வு - இளம் விஞ்ஞானி வினிஷாவின் கண்டுபிடிப்புகள்