கர்நாடக மாநிலம் பெங்களூருவில் போதை பொருள் விநியோகம் அதிகளவில் நடைபெறுவதாக எழுந்த புகாரையடுத்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் முக்கிய கன்னட பிரபலங்கள் பலரும் வரிசையாக சிக்கிகொண்டு வருகின்றனர்.
போதைப் பொருள் தடுப்பு பிரிவின் கீழ் கன்னட நடிகைகள் ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி, ஹோட்டல் அதிபர்கள் விரேன் கண்ணா, முகமது அனூப், ராகுல் ஷெட்டி, பிரித்வி ஷெட்டி, முன்னாள் ஜனதா தள அமைச்சர் ஜீவராஜ் ஆல்வாவின் மகன் ஆதித்யா ஆல்வா உள்ளிட்ட 29 பேர் கைது செய்யப்பட்டு மத்திய குற்றப்பிரிவு போலீஸார் காவலில் எடுத்து விசாரித்துவருகின்றனர். மேலும், பலருக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், போதை பொருள் விநியோகம் தொடர்பாக உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு (ஐ.எஸ்.டி) நடத்திய விசாரணையில், ராணி என்ற பெண் ரவுடி-ஷீட்டர் தொலைக்காட்சி நடிகர்களுக்கு போதைப்பொருள்களைக் கொடுப்பது தெரியவந்தது.
கிடைத்த தகவலின்படி, பல ரவுடிகளுடன் தொடர்பில் உள்ள ராணியின் மீது பெங்களூருவில் உள்ள பல காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை முயற்சி, அச்சுறுத்தல் உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ராணி போதை பொருள் விநியோகம் செய்யும் வீடியோ ஒன்றும் ஐஎஸ்டியிடம் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. கைதான திரைப்பிரபலங்களும் ராணியின் பெயரையே கூறியுள்ளதால், அவரை தேடும் பணியில் காவல் துறையினர், ஐஎஸ்டி, மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.