கடந்த இரண்டு தினங்களாக சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்ட இரண்டு பெண்களின் படம் கலக்கி வருகிறது. இதற்கு முக்கிய காரணம் உத்தரப் பிரதேச மாநிலம் வாராணாசி மாவட்டத்தின் ரோஹனியா பகுதியைச் சேர்ந்த அந்த இரண்டு இளம் பெண்களும், கடந்த செவ்வாய்க்கிழமை அன்று அருகிலுள்ள சிவன் கோயிலுக்குச் சென்றுள்ளனர். பின்னர் அவர்கள் அங்கிருந்த அர்ச்சகரிடம் தங்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்கும்படி கூறியுள்ளனர்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த கோயிலின் அர்ச்சகர் முதலில் மறுத்துள்ளார். அதன்பின்னர் அந்த இரண்டு பெண்களும் அங்கிருந்து செல்லாமல் திருமணம் செய்து வைக்கும்படி தொடர்ந்து வற்புறுத்தியுள்ளனர். இதையடுத்து, கோயிலின் அர்ச்சகர் அவர்களின் திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளவே, ஜீன்ஸ் உடையில் வந்திருந்த இரண்டு பெண்களும், அம்மாநிலத்தில் திருமணத்திற்கு அணியும் பாரம்பரிய சிகப்பு உடையை அணிந்து திருமணத்திற்கு தயாராகினர். இது குறித்து கேள்விப்பட்ட அருகிலிருந்த பொதுமக்கள் கோயிலுக்குள் கூடினர்.
இறுதியில் அர்ச்சகர் முன்னிலையில் இரண்டு பெண்களும் மணமாலையை மாற்றிக்கொண்டு திருமணம் செய்துகொண்டனர். அங்கிருந்த பொதுமக்கள் 'மணமகள்'களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். திருமணம் முடிந்த கையோடு அந்த இரண்டு பெண்களும் அங்கிருந்து உடனடியாகச் சென்றுவிட்டனர். மேலும் இந்த திருமணத்தை நடத்தி வைத்த கோயிலின் அர்ச்சகரை அங்கிருந்த சிலர் கடுமையாக விமர்சித்தனர்.
அந்த பெண்களில் ஒருவர் சமூக வலைதளத்தில், தங்களின் திருமண புகைப்படத்தை பதிவிடவே, இது காட்டுத்தீ போல் பரவத் தொடங்கியதோடு, அதிர்வலைகளையும் கிளப்பியது.
திருமணம் செய்த கொண்ட பெண்கள் இருவரும் உறவினர்கள் ஆவர். கான்பூரைச் சேர்ந்த பெண் வாரணாசியில் உள்ள தனது உறவினரின் வீட்டில் இருந்து படித்துள்ளார். அப்போது தனது உறவுக்கார பெண்ணுடன் அவருக்கு காதல் மலர்ந்துள்ளது. அந்த பெண்களின் உறவுக்கு அவர்களின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த சூழலில் இருவரும் இதுபோன்று திருமணம் செய்து கொண்டு கான்பூருக்கு சென்றுவிட்டனர். புனித நகராகக் கருதப்படும் வாரணாசியில் நடைபெற்றுள்ள இந்த ஒருபாலின திருமணத்திற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்தப் பெண்களுக்கு ஆதரவாகவும் பலர் குரல் எழுப்பியுள்ளனர்.