இளங்கலை, முதுகலை மருத்துவப் படிப்புகளில் அரசுக் கல்லூரிகளில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு (ஓபிசி) 50 விழுக்காடு தேசிய அளவிலான இட ஒதுக்கீட்டை அமல்படுத்த மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி தமிழ்நாடு அரசு, திமுக, அதிமுக, பாமக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், இட ஓதுக்கீடு அடிப்படை உரிமையல்ல எனக் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தை நாட உச்ச நீதிமன்றம் மனுதாரர்களுக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில், இரண்டாம் கட்ட மருத்துவக் கலந்தாய்வு நடைபெற்றதைத் தொடர்ந்து, இடங்கள் ஒதுக்கப்பட்டுவருகிறது. எனவே இதுகுறித்த வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. இருப்பினும், வழக்கின் விசாரணையை நீதிமன்றம் ஒத்திவைத்தது. இதையடுத்து இவ்வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் உடனடியாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிடக் கோரி தமிழ்நாடு அரசு மனு தாக்கல் செய்தது.
அதில், "ஏற்கனவே சலோனி குமார் என்பவர் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என மத்திய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது. இந்த வழக்கின் அடிப்படையில் வரும் தீர்ப்பை ஒட்டியே சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தது. இவ்விவகாரத்தில் உயர் நீதிமன்றத்தை மத்திய அரசு தவறாக வழிநடத்தியுள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதி நாகேஷ்வர ராவ் தலைமையிலான அமர்வு இன்று (ஜூலை 13) விசாரித்தது. ஓபிசி மருத்துவ இட ஒதுக்கீடு வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் விசாரிக்க சலோனி குமார் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு தடையாக இல்லை என்று கூறி, இவ்விவகாரம் தொடர்பான மனுக்களை விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திமுக சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், "சலோனி குமார் வழக்கில், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு தேசிய அளவிலான இட ஒதுக்கீட்டை அமல்படுத்த உறுதியாக உள்ளோம் என மத்திய அரசு 2016ஆம் ஆண்டு பதில் மனு தாக்கல் செய்தது. ஆனால், தற்போது, அதே அலுவலர் இதற்கு எதிராக மனு தாக்கல் செய்துள்ளார். மத்திய அரசு அதன் நடவடிக்கையில் நேர்மையாக இல்லை. நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான ஓபிசி மாணவர்களுக்கு எதிராக சட்ட விரோதமாகச் செயல்படுகிறது" என்றார்.
இதையும் படிங்க: அமெரிக்காவுடன் கைகோக்கும் இந்தியா!