செப்டம்பர் 14ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் மக்களவையில் எட்டு சட்ட முன்வடிவுகளை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.
குறிப்பாக, உழவர் உற்பத்தி வர்த்தக (ஊக்குவிப்பு மற்றும் வசதி) மசோதா 2020, விவசாயிகள் (அதிகாரம் மற்றும் பாதுகாப்பு அளித்தல்) விலை உத்தரவாதம் மற்றும் பண்ணை சேவைகள் மசோதா 2020 ஆகிய மூன்று சட்ட முன்முடிவுகளை மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அறிமுகப்படுத்தினார்.
இந்த மூன்று சட்ட முன்வடிவுகளை காங்கிரஸ், டி.எம்.சி., திமுக, மதிமுக, விசிக, ஆர்.ஜே.டி., சிபிஐ, சிபிஐ (எம்) உள்ளிட்ட 18 எதிர்க்கட்சிகள் 'உழவர்களுக்கு எதிரான சதி' எனக் குறிப்பிட்டு எதிர்ப்புத் தெரிவித்தன.
இந்த சூழலில் கடந்த செப்.27ஆம் தேதியன்று இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவற்றுக்கு ஒப்புதல் அளித்தார்.
இதனையடுத்து, நாடு முழுவதும் தீவிரமாக போராட்டங்கள் நடைபெற தொடங்கின. அதன் ஒரு பகுதியாக, பஞ்சாப் மாநிலத்தின் மூன்று வெவ்வேறு பகுதிகளில் இருந்து சிரோமணி அகாலி தளம் சார்பில் 'உழவர் பேரணி' இன்று தொடங்கியது.
அகாலி தளம் கட்சித் தலைவர் சுக்பீர் சிங் பாடல் பொற்கோயிலில் இருந்தும், முன்னாள் மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாடல் டம்தாமா சாஹிபிலிருந்தும், பிரேம் சிங் சந்துமாஜ்ரா கேஷ்கர் சாஹிப்பிலிருந்தும் தலைநகர் சண்டிகரை நோக்கி இந்த பேரணியை வழிநடத்துவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சண்டிகரில் நிறைவடையும் இந்தப் பேரணி சார்பில் புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி பஞ்சாப் ஆளுநரிடம் மனு ஒன்று கையளிக்கப்படும். இது தொடர்பாக கருத்து தெரிவித்த சுக்பீர் சிங் பாடல் கூறுகையில், "இரு அவைகளின் அமர்வுகள் மீண்டும் கூட்டப்பட்டு இந்த புதிய வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்பட வேண்டும் என்று கோரி இந்த பேரணி நடைபெறவுள்ளது.
இது தொடர்பாக கோரிக்கை மனு பஞ்சாப் ஆளுநரிடம் ஒப்படைக்கப்படும். அந்த கறுப்புச் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளின் போராட்டம் தொடரும்" என்று தெரிவித்தார்.
இந்தப் பேரணியில் சுமார் இரண்டு லட்சம் மக்கள் இணைவர் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
பஞ்சாபை தொடர்ந்து தெலங்கானா, ஹரியானா ஆகிய மாநிலங்களில் இந்தச் சட்ட முன்வடிவுகளை எதிர்த்து உழவர் போராட்டங்கள் தீவிரமடைந்துவருகின்றன.