2008-ல் ஏற்பட்ட உலகளாவிய நிதி நெருக்கடியிலிருந்து தற்போது தான் மீண்டு வரும் நிலையில் கோவிட்-19 புதிய நெருக்கடி வந்துள்ளது. இந்த நெருக்கடியிலிருந்து இந்தியா விடுபடவில்லை.
மாறாக, மத்திய, மாநில அரசுகளின் அதிக வருவாய் மற்றும் நிதிப் பற்றாக்குறைகள், தனியார் முதலீடு மற்றும் சேமிப்பு குறைதல், ஏற்றுமதிகள் வீழ்ச்சியடைதல், அதிக அளவு கடன்பட்டிருத்தல், வங்கி நெருக்கடி ஆகியவற்றால் பலவீனமான கட்டத்தில் இருக்கிறது.
பிரகாசமான இடங்கள்
இந்நேரத்தில், கிராமப்புற பொருளாதாரம் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கான அறிகுறிகளைக் காட்டுகிறது என்பதை உன்னிப்பாக கவனிக்க வேண்டிய ஒன்றாகும்.
உள்ளூர் ஊரடங்குகள் இருந்தபோதிலும் மின்சார தேவை கோவிட்டிற்கு முந்தைய நிலைகளை எட்டியுள்ளது, மே மாதத்திலிருந்து பெட்ரோலிய பொருட்களின் நுகர்வு மேம்பட்டுள்ளது, நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து அதிகரித்து இரு சக்கர வாகன தேவை எதிர்பார்த்ததை விட வேகமாக மீண்டு வருவதாக தெரிகிறது.
மேலும் டிராக்டர் விற்பனை கடந்த ஆண்டை ஒப்பிடும்போது கிட்டத்தட்ட 20% அதிகரித்துள்ளது. கிராமப்புற தேவை தொடர்பான அறிகுறிகள் இந்தியா எதிர்பார்த்ததை விட விரைவில் மீண்டுவர உதவும் என்ற நம்பிக்கையை அளிக்கிறது.
கடந்த ஆண்டு 4 கோடி ஏக்கராக இருந்த மானாவாரி சாகுபடி இந்த ஆண்டு 5.8 கோடி ஹெக்டேர் ஆக உயர்ந்துள்ளது. இதில் நெல் (26%), பருப்பு வகைகள் (160%), தானியங்கள் (29%), எண்ணெய் விதைகள் (85%) மற்றும் பருத்தி (35%) என்பது ஒரு நல்ல அறிகுறி. இந்த வேகம் வெட்டுக்கிளி அல்லது பிற இயற்கை பேரழிவுகள் இல்லாமல் இருந்தால் இந்த ஆண்டு எதிர்பார்த்ததை விட அதிகபட்ச மகசூல் கிடைக்கலாம். இதன் மூலம் கிராமப்புறங்களில் விவசாய வேலைவாய்ப்பு மற்றும் அதிக செலவழிப்பு வருமானம் அதிகரிக்கும்.
அமெரிக்கா போன்ற பிற பெரிய உற்பத்தியாளர்களில் பயிர் விதைப்பு முந்தைய ஆண்டை விட குறைவாக உள்ளது என்ற உண்மையை கருத்தில் கொண்டு, சர்வதேச விவசாய பொருள்களின் விலைகள் ஆதரவாக இருக்கலாம். கடந்த ஆண்டு ரூ. 44,000 கோடி ஒதுக்கியிருந்த விவசாய மற்றும் கிராம அபிவிருத்தி அமைச்சகம் இந்த ஆண்டு இதுவரை ரூ.90,000 கோடியை ஒதுக்கியுள்ளது.
எச்சரிக்கை தேவை
இதன் பொருள் பொருளாதாரம் மீண்டுள்ளது என்று அர்த்தமல்ல. இது ஒரு நல்ல ஆரம்பம் என்று மட்டுமே அர்த்தம். எவ்வாறாயினும், இவை மிகவும் நீடித்த பொருளாதார மாற்றத்தின் அறிகுறிகள் என்பதை உறுதிப்படுத்துகிறது என்று கூற முடியாது.
வங்கிகள் கடன் வழங்குவதில் அதிக அக்கறை காட்டவில்லை என்பது தங்கக் கடன் வழங்கும் நிறுவனங்களின் அதிகரிக்கும் கடன் மூலம் தெரியவருகிறது.
தேவைப்படும் ஒரு முக்கியமான கொள்கை தலையீடு என்னவென்றால், அரசாங்கங்கள் வரிக்கு குறைந்த ஆதாரங்களே உள்ளதால் முக்கியமான பொருள்களுக்கு அதிக வரி விதிக்கின்றன.
இது சாத்தியமான எந்தவொரு தேவை அதிகரிப்பையும் அழிக்கும். எனவே ஜி.எஸ்.டி உள்ளிட்ட அனைத்து பொருள்களின் மீதான வரிகளையும், பெட்ரோலிய பொருள்களின் மீதான வரிகளையும் குறைப்பது, தேவைகளை அதிகரிப்பதற்கான சிறந்த வழியாகும். ஏனெனில் வீடுகளின் கையிருப்புநிலைகள் தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது.
பிற்படுத்தப்பட்ட மற்றும் கிராமப்புறங்களில் செய்யப்படும் முதலீடுகளுக்கு மத்திய அரசு 10 ஆண்டு வரி விடுமுறை அறிவிக்க வேண்டும் என்பது முக்கியமான கோரிக்கையாகும். இது நீண்டகால கிராமப்புற வேலைவாய்ப்பை உருவாக்க பயனுள்ளதாக இருக்கும்.
இதையும் படிங்க: இந்திய அணுசக்தி துறையின் நோக்கங்களும் அதன் சவால்களும்!