West Bengal: மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தின் ஜியாகஞ் பகுதியில் வசித்து வருபவர்கள் பந்து பிரகாஷ் பால்(35), தொடக்கப் பள்ளி ஆசிரியராக வேலை செய்து வருகிறார். இவருக்கு பியூட்டி (30) என்ற மனைவியும், 8 வயதில் ஆர்யா என்ற மகனும் உள்ளனர். தற்போது பியூட்டி 8 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.
விஜயதசமி அன்று மேற்கு வங்க மாநிலமே கொண்டாட்டத்தில் இருந்தபோது, பிரகாஷ் பால் குடும்பத்தினர் யாரும் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளாததால் அக்கம் பக்கத்தினர் அவர்களது வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது மூவரும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருந்ததைப் பார்த்து, உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதையடுத்து அங்குசென்ற காவல்துறையினர், கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை செய்யப்பட்டதற்கான காரணம் இதுவரை தெரியாததாலும், கொலைக் குற்றவாளிகள் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பதும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் பந்து பிரகாஷ் பால் சமீபத்தில் தான், தன்னை ஆர்.எஸ்.எஸ்.-ல் இணைத்துக்கொண்டார். இதனால் ஆளும் கட்சியான திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் தான் இந்த சம்பவத்திற்குக் காரணம் என பாஜகவினர் கூறுகின்றனர்.
அரசியல் ரீதியான கொலைகள் அதிகமாக நடக்கும் மாநிலங்களில் முக்கியமான மாநிலம் மேற்கு வங்கம். ஏனென்றால் மார்க்சிஸ்ட் கட்சியினருக்கும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினருக்கும் பெரும் மோதல்கள் அடிக்கடி ஏற்பட்டுள்ளன. தற்போது ஆளும் கட்சியான திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக, மேற்கு வங்கத்தில் பாஜக வளர்ந்து வருகிறது. இதனால் இந்த கொலைக்கான காரணம் பற்றி வேகமாக விசாரணை நடத்த வேண்டும் என பாஜகவினர் கூறுகின்றனர். நாடு முழுவதும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ள இந்த படுகொலைகள் குறித்து மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மெளனம் காப்பது பற்றி, சமூகவலைத்தளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிக்கலாமே: 6 வயது சிறுமியை மாடியிலிருந்து தூக்கி வீசி கொடூரக் கொலை செய்த சித்தி!