கரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை, மாநிலங்களவையில் மழைக்கால கூட்டத்தொடர் திட்டமிட்டபடி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் நேற்று தொடங்கியது.
மாநிலங்களவை துணைத் தலைவராக பதவி வகித்து வந்த ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் உறுப்பினர் ஹரிவன்ஷ் நாராயண் சிங்கின் பதவிக் காலம் நிறைவடைந்ததை அடுத்து புதிய துணைத் தலைவரைத் தேர்வுசெய்ய தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது.
மாநிலங்கவையின் இன்றைய முதல் அமர்வின் இரண்டாம் காலப்பகுதியில் துணைத் தலைவரை தேர்ந்தெடுக்க தேர்தல் நடத்தப்படவுள்ளதாக மாநிலங்களவைச் செயலாளர் அறிவித்தார்.
மாநிலங்களவைத் துணைத் தலைவர் பதவிக்கு ஆளும் பாஜக கூட்டணி சார்பில் மீண்டும் நாராயணன் சிங்கும், எதிர்க்கட்சிகள் சார்பில் ராஷ்டிரிய ஜனதா தளத்தை சேர்ந்த மனோஜ் ஜாவும் முன்மொழியப்பட்டு போட்டியிட்டனர்.
250 உறுப்பினர்களை கொண்ட மாநிலங்களவையில் 80 உறுப்பினர்களைக் கொண்ட பாஜகவுக்கு பிஜூ ஜனதாதளம், அதிமுக, ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் போன்ற கட்சிகள் ஆதரவளித்ததாக அறிய முடிகிறது.
நடைபெற்ற குரல் வாக்கெடுப்பில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிட்ட ஐக்கிய ஜனதா தளம் எம்.பி., ஹரிவன்ஷ் நாராயண் சிங் வெற்றி பெற்றார்.
வெற்றிப் பெற்ற நாராயண் சிங்கிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
அப்போது பேசிய அவர் "சபையின் ஒவ்வொரு உறுப்பினரும் ஹரிவன்ஷ் நாராயண் சிங் மீது உயரிய மரியாதை வைத்திருக்கின்றனர். அவர் இந்த மரியாதையைப் பெற்றுள்ளார். அவரது நேர்மையே அதற்கு முழுமுதற்காரணம். நாடாளுமன்றத்தில் அவரது பக்கச்சார்பற்ற பங்கு இந்த ஜனநாயகத்தை பலப்படுத்துகிறது" என்று பாராட்டினார்.