ஆந்திர மாநிலம் அனந்தபுர் மாவட்டம் பகுதியில் உள்ள தர்கா முன்பு 12 வருடங்களாக பஷீர் என்பவர் பிச்சை எடுத்து வந்தார். தர்காவுக்கு வருபவர்கள் இவருக்கு பணமும், உணவும் அளித்து வந்துள்ளனர்.
இவர் சில்லறை காசுகளை அருகில் இருக்கும் கடைகளில் கொடுத்து பணமாக மாற்றிக் கொள்வார். இரவு தர்கா முன்பே படுத்து தூங்குவார்.
இந்நிலையில் நேற்று காலை தர்கா முன்பு உறங்கி கொண்டிருந்த பஷீர் நீண்ட நேரமாகியும் எழுந்திருக்கவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் சந்தேகம் அடைந்து பஷீரை எழுப்ப முயன்றனர். அப்போது அவர் உயிரிழந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பஷீரின் பையில் அவரது உறவினர்கள் குறித்து ஏதேனும் தகவல் உள்ளதா என சோதனை மேற்கொண்டனர். அப்போது அவரது பையில் ஏராளமாக பணம் இருந்துள்ளது. 12 ஆண்டுகளாக தர்கா முன்பு பிச்சை எடுத்து வந்த பஷீர் யாரிடமும் பேசமாட்டார். பஷீரின் உறவினர்கள் குறித்து தகவல் கிடைக்காததால் அவரது உடலை தர்கா நிர்வாகத்தினரே அடக்கம் செய்தனர்.
பின் பணத்தை எண்ணி பார்த்தபோது மொத்தம் 3 லட்சத்து 22 ஆயிரத்து 676 ரூபாய் இருந்துள்ளது. இப்பணத்தை காவல் துறையினர் தர்கா நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர்.
இச்சம்பவம் போலவே, தமிழில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் 1987ஆம் ஆண்டு வெளிவந்த பேசும் படம் திரைப்படத்தில் வரும் இறுதி காட்சியில் இதே போன்று இறந்த பிச்சைகாரரை நகராட்சி பணியாளர்கள் இறுதி சடங்கு செய்வதற்காக அவரை வண்டியில் ஏற்றி செல்வர். அந்த சமயத்தில் அவரது உடமைகளை சோதனை செய்யும்போது பணம் இருப்பதை கண்டறிந்து அங்கிருப்பவர்கள் அதை பகிர்ந்து எடுத்துக்கொளும் காட்சியை ஞாபகப்படுத்துவதாக இருக்கிறது என சமூக வலைதளவாசிகள் கூறிவருகின்றனர்.