ஒடிசாவில் இருந்து வந்த காரில் இருந்து, கணக்கில் காட்டப்படாத ஒரு கோடி ரூபாய்க்கும் மேலான பணத்தை சத்தீஸ்கர் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர், இது தொடர்பாக இரண்டு நபர்களை கைது செய்துள்ளதாக காவல் கண்காணிப்பாளர் பிரபுல்லா குமார் தெரிவித்தார்.
இது குறித்து பிரபுல்லா குமார் கூறுகையில், 'ஒடிசாவின் பர்கரில் இருந்து இரண்டு பேர் ராய்ப்பூருக்கு காரில் சென்றுள்ளனர். பின்னர் சந்தேகத்தின்பேரில், இந்தக் காரை காவல் துறையினர் சோதனை செய்தபோது அதில், கணக்கில்காட்டப்படாத மொத்தம் ஒரு கோடியே 12 லட்சத்து 99 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யதுள்ளனர்.
இந்தச் சம்பவம் சத்தீஸ்கரின் மகாசமுண்ட் மாவட்டத்தில் நிகழ்ந்தது. அதைத் தொடர்ந்து அந்த இரண்டு பேரும் அழைத்துச் செல்லப்பட்டு சிறப்பு விசாரணைக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்' என்றார்.
இந்நிலையில் அவர்கள் மீது சிஆர்பிசி பிரிவு 102இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் குற்றம் சாட்டப்பட்ட இருவருமே ஒரு வணிகருக்குப் பணம் கொடுப்பதற்காக ராய்ப்பூருக்குச் சென்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இருப்பினும், முழு விசாரணையும் நடந்து வருகிறது.