உத்தரகண்ட் மாநிலத்தின் ரூர்க்கி நகரிலுள்ள ஒரு கல்லூரியில் நேற்று மாணவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த வாக்குவாதம் முற்றியதைத் தொடர்ந்து இரண்டு வெளிநாட்டு மாணவர்களை சக மாணவர்கள் தாக்கியுள்ளனர்.
அந்த இரண்டு மாணவர்களையும் கல்லூரி நிர்வாகம் சில காரணங்களால் சில நாள்களுக்கு முன் இடைநீக்கம் செய்திருந்தது.
இருப்பினும், அவர்கள் கல்லூரி விடுதியில் தொடர்ந்து தங்கியுள்ளனர். அப்போது சக மாணவர்களுக்கு அவர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது.
வெளிநாட்டு மாணவர்கள் கொடூரமாக தாக்கப்படும் இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலானது.
சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோவில், 10 முதல் 15 மாணவர்கள், அந்த இரண்டு வெளிநாட்டு மாணவர்களை கல்லூரி வளாகத்திலேயே தாக்குகின்றனர்.
மேலும், அவர்களை கீழே தள்ளி தரதரவேன்று இழுத்துச் செல்கின்றனர்.
இந்தக் கொடூர தாக்குதல் சம்பவம் கல்லூரியின் பாதுகாப்பு காவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் முன்னிலையில் நடந்ததுள்ளது. மாணவர்கள் மீது சக மாணவர்களாலேயே நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் மனிதாபிமானமற்றது என்று பலரும் விமர்சித்துள்ளனர்.
மேலும், மாணவர்கள் தாக்கப்படும் வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, ஏழு மாணவர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
இது குறித்து காவல் துறையினர் கூறுகையில், "மாணவர்கள் இருவரும் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று நடந்த இந்தத் தாக்குதல் குறித்து எங்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நாங்கள் ஏழு மாணவர்களை கைது செய்துள்ளோம்" என்றனர்.
இதையும் படிங்க: சர்வதேச பயணத்தில் கட்டுப்பாடுகள் தொடரும்' - மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி