பிரியங்கா காந்தியின் கணவரும் பிரபல தொழிலதிபருமான ராபர்ட் வத்ராவும் அவரது நெருங்கிய உதவியாளர் மனோஜ் அரோராவும், லண்டலின் சொத்து வாங்கியதில் பண மோசடியில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டிய அமலாக்கத்துறை அவர்கள் மீது வழக்குப் பதவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. தங்களுக்கு ஜாமீன் வழங்கக் கோரி ராபர்ட் வத்ரா மற்றும் மனோஜ் அரோரா தாக்கல் செய்த மனு இன்று டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த்து.
இதனை விசாரித்த சிறப்பு நீதிபதி அரவிந்த் குமார், இவரும் வெளிநாடு செல்லக்கூடாது என்ற நிபந்தனையுடன் முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். இருவரும் 5 லட்ச ரூபாய் பிணைத் தொகையாக செலுத்த வேண்டும் என கூறிய நீதிபதி, ஆதாரங்களை அழிக்க முயற்சி செய்யக்கூடாது, எப்போது சம்மன் அனுப்பினாலும் விசாரணைக்கு ஆஜராக வர வேண்டும் என உத்தரவிட்டார்.
இதன் பின் நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராபர்ட் வத்ராவின் வழக்கறிஞர் கேடிஎஸ் துளசி, வத்ராவின் அலுவலகத்திலிருந்து சட்டவிரோதமாக 21 ஆயிரம் ஆவணங்கள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றிலிருந்து ஏதும் கிடைக்கவில்லை என்றும் கூறினார். அவரது குடும்ப உறவுகளுக்காகவே ராபர்ட் வத்ராவை இதுபோன்று பழிவாங்கப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
முன்னதாக, இது ஜோடிக்கப்பட்ட வழக்கு என்றும் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் அவரது குடும்பத்திற்கு எதிராக ஆளும் பாஜக அரசு வேண்டுமென்றே ராபர்ட் வத்ரா மீது வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும் காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியிருந்தது.