இந்திய ரயில்வே துறையை மேம்படுத்த பல ஆண்டுகளாக மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இதன் ஒரு அங்கமாக, ரயில்களை 130 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், படுக்கை வசதி கொண்ட ரயில்களை நீக்கி, முற்றிலும் குளிர்சாதனப் பெட்டிகள் கொண்ட ரயில்களை இயக்கத் திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது குறித்து ரயில்வே துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "குளிர்சாதனப் பெட்டி கொண்ட ரயில்வே தற்போது அவசியமாகியுள்ளது. இவை, 130 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்படும். இந்தியன் ரயில்வே துறையையே முற்றிலுமாக மேம்படுத்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
குளிர்சாதனப் பெட்டிகள் கொண்ட ரயில் மட்டும் 130 கிலோ மீட்டரிலிருந்து 160 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்படும். சாதாரண ரயில்கள் 110 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படும். தற்போதுள்ள பெரும்பாலான விரைவு ரயில்கள் 110 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டு வருகின்றன.
ராஜ்தானி, சதாப்தி ஆகிய ரயில்கள் 120 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படுகின்றன. தற்போதுள்ள காலக்கட்டத்தில், குளிர்சாதனப் பெட்டிகள் கொண்ட ரயில்கள் அவசியமாகின்றன. ஏற்கனவே சில ரயில்கள் 130 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த ஆண்டு மட்டும் 100 பெட்டிகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு 700 பெட்டிகளை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது" என்றார்.