மும்பை - அகமதாபாத் இடையிலான 508 கிமீ தொலைவுக்கு இயக்கப்படவுள்ள புல்லட் ரயில் திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் திட்டத்தை செயல்படுத்தும் வகையில் வனவிலங்குகள், வனவியல், கடலோர கட்டுப்பாட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வீடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதுகுறித்து பேசிய ரயில்வே போர்டு தலைவர் வி.கே. யாதவ், "மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் தேவையான அனுமதி யாவும் பெறப்பட்டுள்ளது. அதிவிரைவு ரயில் திட்டத்திற்காக 1,651 உபகரணங்களில் 1,070 உபகரணங்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மொத்தமாக, புல்லட் ரயில் திட்டத்தை இயக்குவதற்காக 67 விழுக்காடு நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. குஜராத்தில் மட்டும் திட்டத்தை அமல்படுத்தும் நோக்கில் 956 ஹெக்டேர் நிலத்தில் 825 கையகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், மகாராஷ்டிராவில் 22 விழுக்காடு நிலம் மட்டும் கையகப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, தாதர் மற்றும் நாகர் ஹவேலி யூனியன் பிரதேசத்தில் ஏழு ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
குஜராத்தில் மட்டும் ஐந்து ரயில் நிலையங்கள் அமைக்கப்படவுள்ள நிலையில், 325 கிமீ தொலைவுக்கு புல்லட் ரயில் இயக்கப்படவுள்ளது. இதற்காக, 32,000 கோடி ரூபாய் மதிப்பிலான எலம் விடப்பட்டுள்ளது" என்றார். கடந்த 2017ஆம் ஆண்டு, 1.08 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான புல்லட் ரயில் திட்டத்திற்கு அப்போதைய ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, பிரதமர் மோடி ஆகியோர் அடிக்கல் நாட்டினர்.
திட்ட பணிகள், 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நிறைவுபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. புல்லட் ரயில்கள் 350 கிமீ வேகத்தில் இயக்கப்படவுள்ளது. எனவே, 508 கிமீ தொலைவை இரண்டு மணி நேரத்தில் கடந்துவிட முடியும்.