மாநிலங்களவை துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல், மழைக்காலத் கூட்டத்தொடரின் முதல் நாளான செப்டம்பர் 14ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த பதவிக்கு முன்னதாக தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பாக, ஜனதா தளம் கட்சியின் எம்.பி. ஹரிவன்ஷ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில், ராஷ்டிரிய ஜனதா தளத்தைச் சேர்ந்த எம்.பி. மனோஜ் ஜா, எதிர்க்கட்சிகளின் சார்பில் மாநிலங்களவை துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிட உள்ளதாகத் தெரிகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கலை நாளை (செப்டம்பர் 11 ஆம் தேதி) செய்யவுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிகார் சட்டப்பேரை தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், மாநிலங்களவையின் துணைத் தலைவர் பதவிக்கு பிகாரைச் சேர்ந்த ஜனதா தளம் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகிய இரு கட்சிகளின் எம்.பிக்கள் நேரடியாகப் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.
மாநிலங்களவையில் மொத்தம் உள்ள 245 எண்ணிக்கையில், 116 பேர் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ளனர். இதுபோக மற்ற கூட்டணி கட்சிகளான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலங்கானா ராஷ்டிரிய சமிதி உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவு பாஜகவிற்கு இருப்பதால், அக்கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளரே வெற்றி பெறும் வாய்ப்பு அதிகளவில் இருப்பதாக கூறப்படுகிறது.