ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்திலுள்ள பெய்க்போரா கிராமத்தில் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த தலைவர் ரியாஸ் நாய்கோவும், மற்றொரு போராளியும் பாதுகாப்புப் படை வீரர்களால் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இதனையடுத்து கலவரம் ஏதும் ஏற்படக்கூடாது என்பதற்காகவும், காஷ்மீரில் அமைதியை உறுதி செய்யவும் பள்ளத்தாக்கின் முக்கிய பகுதிகளில் கூடுதலாக பாதுகாப்புப் படை வீரர்கள் குவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், ரியாஸ் நாய்கோ சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காஷ்மீர் மண்டல ஆய்வாளர் விஜய்குமார் கூறுகையில், ”ரியாஸ் நாய்கோ சுட்டுக்கொல்லப்பட்டது மிகப்பெரிய வெற்றியாகும். கடந்த ஆறு மாதங்களாக அவரை கண்காணித்து வந்தோம்.
ரியாஸ் நாய்கோ சமூக ஊடகங்களில் அடிக்கடி வீடியோ வெளியிட்டு இளைஞர்களை பயங்கரவாத அமைப்பில் சேர ஊக்குவித்து வந்தார். ரியாஸ் சுட்டுக்கொல்லப்பட்டதின் மூலம் பள்ளத்தாக்கு பகுதியில் அமைதி திரும்பும்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஷ்மீர் பள்ளத்தாக்கில் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டன. செல்போன் சேவையையும் நிறுத்தி வைத்துள்ளோம். இந்த லாக்டவுன் காலகட்டத்தில் காஷ்மீரில் 40 பிரிவினைவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி 27 என்கவுன்ட்டரில் 64 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்” என்றார்.
இதையும் படிங்க:தேடப்படும் பயங்கரவாதி ரியாஸ் நாய்கோ என்கவுண்டரில் சுட்டுக்கொலை