அஸ்ஸாம் மாநிலத்தில் பெரும்பாலான பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால், பிரம்மபுத்திராவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பல குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மாநிலம் முழுவதும் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளன. இந்த வெள்ளத்தால் காசிரங்கா தேசிய பூங்காவில் ஒன்பது காண்டாமிருகங்கள் உள்பட 108 விலங்குகள் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்து அஸ்ஸாம் பேரிடர் மீட்பு படையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இதுவரை அஸ்ஸாம் வெள்ளத்தில் 87 பேர் உயிரிழந்தனர். சுமார் 30 மாவட்டங்களில் 56 லட்சம் மக்கள் பாதிப்படைந்துள்ளனர்" எனக் குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பாக அறிக்கை வெளியிட்ட மத்திய நீர் ஆணையம், "வெள்ளப்பெருக்கால் அஸ்ஸாமில் நாகான் மாவட்டத்தில் கம்பூரில் கோபிலி நதி ஆபத்தான சூழ்நிலையில் ஓடிக்கொண்டிருக்கிறது" என எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், நேபாளத்தில் உள்ள கண்டக் ஆற்றில் வினாடிக்கு மூன்று லட்சம் கன அடி நீர் திறந்துவிடப்படுவதால் பிகாரில் கோபால்கஞ்ச், முஷாபர்பூர், கிஷன்கஞ்ச் உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.