புதுச்சேரி முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில், காவலராக பணிபுரிந்து வருபவர் ஞானசேகர். இவரது 70 வயது தாய் திடீரென வீட்டில் இறந்து கிடந்துள்ளார். அவருக்கு கரோனா தொற்று பரிசோதனை செய்ய அவரது உடல் புதுச்சேரி கதிர்காமம் இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டது.
அங்கு, தாயாருக்கு தொற்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, தாயின் உடலை அடக்கம் செய்ய, சிபாரிசின் அடிப்படையில் கேட்டிருந்தார். பின்னர், மருத்துவமனை நிர்வாகம் அவசர ஊர்தி மூலம் உடலை எடுத்துச் செல்ல அனுமதி கொடுத்தது.
இந்நிலையில், புதுச்சேரி வில்லியனூர் மணவெளியைச் சேர்ந்த 43 வயதுடைய குணவள்ளி என்பவர் வீட்டிலேயே இறந்துகிடந்துள்ளார். அவரது உடலும் கரோனா பரிசோதனைக்காக புதுச்சேரி கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டு, பரிசோதனைக்காக அவரது உடல் சவக்கிடங்கில் வைக்கப்பட்டது.
இதையடுத்து, காவலரின் தாயார் உடலை அவசர ஊர்தியில் ஏற்றுவதற்கு பதிலாக குணவள்ளி என்பவரது உடலை ஏற்றி அனுப்பிவைத்துள்ளனர். இதையறியாத காவலர், அவரது உறவினர்கள், தாய்க்கு செய்யவேண்டிய காரியங்களை செய்து உடலை அடக்கம் செய்தனர்.
இதற்கிடையே, குணவள்ளியின் உறவினர்கள் உடலை காணவில்லை என மருத்துவ நிர்வாகத்திடம் கேட்டுள்ளனர். பின்புதான், இறந்தவர்களின் உடல் மாறிய விவரம் தெரியவருகிறது. மேலும், காவலரின் தாயார் உடல் மருத்துவமனையில் உள்ள நிலையில், தற்போது குணவள்ளியின் உடலை கேட்டு அவரது உறவினர்கள் ஆர்ப்பாட்டம் செய்துவருகின்றனர்.
மருத்துவ நிர்வாகத்தினரின் கவனக்குறைவால் நேர்ந்த இந்த சம்பவத்தால் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை குறித்து பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.