கதாநாயக கதைகளில் மட்டுமல்லாது அனைத்து கதைகளிலும் நடித்து வளர்ந்துவருபவர் பிரபல மலையாள திரைப்பட நடிகர் டொவினோ தாமஸ். இவர் தமிழில் வெளியான மாரி 2 திரைப்படத்தில் வில்லனாக நடித்தவர் ஆவார். இவர் தற்போது மின்னல் முரளி என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். ஹாலிவுட் சாகச நாயகன் கதை களம் கொண்ட இந்த படத்தை பஷில் ஜோசப் இயக்கிவருகிறார்.
இந்தப்படத்தின் க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சிக்காக கேரளாவின் பெரியாறு ஆற்றுப் பகுதியை அடுத்துள்ள காலடி என்கிற ஊரில் மிகப்பெரிய சர்ச் செட் ஒன்று 3 மாதங்களுக்கு முன்னதாக போடப்பட்டிருந்தது.
கரோனா பரவல் தாக்கத்தைக் கட்டுப்படுத்த அறிவிக்கப்படிருந்த ஊரடங்கு உத்தரவால், கடந்த 50 நாள்களுக்கு படப்பிடிப்பை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. இந்நிலையில், அந்தப்பகுதியில் வசித்துவரும் வலதுசாரி வகுப்புவாத அமைப்பான ராஷ்டியா பஜ்ரங் தளத்தைச் சேர்ந்த நபர்கள் சர்ச் செட் கட்டப்படுவதாகக் கூறி திரைப்படத்திற்காக அமைக்கப்பட்டிந்த செட்டை இடித்து தள்ளியுள்ளனர். இந்த குற்றச்செயலில் ஈடுபட்டவர்களின் தலைவராக சொல்லப்படும் நபர், செட்டை இடித்து தள்ளும் புகைப்படங்களை தனது முகநூல் பக்கத்திலும் தைரியமாக வெளியிட்டுள்ளார். அந்த பதிவை பகிர்ந்த அந்தராஷ்டிரிய இந்து பரிஷத் அமைப்பின் தலைவரான ஹரி பாலோட், “ராஷ்டியா பஜ்ரங் தளத்தின் மாவட்டத் தலைவருக்கு வாழ்த்து” என தெரிவித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த படத்தின் தயாரிப்பாளர் சோபியா பால் மற்றும் கேரள சினிமா தொழிற்சங்க பொதுச் செயலாளரும், மலையாளத் திரைப்பட இயக்குநருமான பி. உன்னிகிருஷ்ணன் ஆகியோர் இந்த மோசமான செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு காலடி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் செட்டை சூறையாடிய அந்த கும்பலை கைது செய்துள்ளனர்.
இந்த சூறையாடல் சம்பவம் குறித்து நடிகர் தாமஸ் கூறுகையில், "இந்த சர்ச் செட் ஒரு குறிப்பிட்ட மதவாதக் குழுவினரால் அழிக்கப்பட்டுள்ளது. இந்த முறைகேடான செயலுக்கு அவர்கள் மேற்கோள் காட்டிய காரணங்களை இப்போது வரை எனக்கு புரியவில்லை. நாட்டின் வடக்குப் பகுதிகளில் மத வெறியர்களால் திரைப்பட செட் அழிக்கப்படுவதை நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம். தற்போது, அது இங்கேயே நமக்கும் நிகழத் தொடங்கியுள்ளது. இது எங்களுக்கு மிகுந்த மன உளைச்சலையும், மேலும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. சட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல நாங்கள் முடிவு செய்துள்ளோம்” என தெரிவித்தார்.
இந்த சூறையாடல் குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், “கேரளாவில் தங்களது வகுப்புவாத நிகழ்ச்சி நிரலை அமல்படுத்துவதன் ஒரு பகுதியாக சில வகுப்புவாதிகள், மதவெறியர்கள் இந்தச் செயலில் ஈடுபட்டுள்ளனர். நாட்டின் பிற பகுதிகளில் திரைப்படக் குழுவினரை குறிவைக்கும் சம்பவங்களை போல கேரளாவில் நடக்கவிட மாட்டோம். இவை அனைத்தும் நம் நாட்டில் ஒரு குறிப்பிட்ட பிரிவினரால் செய்யப்படுகின்றன என்பதை நாங்கள் அறிவோம். நாட்டில் அவர்களுக்கு எதிராக ஒரு பொதுவான உணர்வு நிலவுகிறது என்பதை அந்த கும்பல் அறிய வேண்டும். இத்தகைய இனவாதக் கூறுகள் காழ்ப்புணர்ச்சியில் ஈடுபடுவதற்கான இடம் கேரளா அல்ல. இந்தச் செயலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரிக்கை விடுத்தார்.
இதையும் படிங்க : 'திரைப்படத் துறை தன்னை சீர்ப்படுத்திக்கொள்ள வேண்டும்'- ஆர். கே. செல்வமணி