ஜனநாயக நாட்டின் வரப்பிரசாதமாக கிடைத்தது தகவல் அறியும் உரிமைச் சட்டம். 2005ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான தேசிய முற்போக்கு கூட்டணி அரசு இதனை கொண்டுவந்தது. இது பிறந்தது தனிக்கதை. அதனை அப்புறம் காணலாம். ஜனநாயகத்தின் குழந்தையான தகவல் அறியும் உரிமைச் சட்டம், வளர வளர சர்வாதிகாரிகளின் குரல் வளையை பிடித்து நெறிக்க ஆரம்பித்தது. ஐந்தே ஆண்டுகளில் அதன் விஸ்வரூப வளர்ச்சியை கண்டு திகைத்த ஆட்சியாளர்கள் அதற்கு எதிராக ஆயுதங்களை கவனமாக ஏவினர். ஒரு கட்டத்தில் இருள் சூழ்ந்த அறைக்குள் தனியாக சிக்கித் தவிக்கும் நிலைக்கு இச்சட்டம் தள்ளப்பட்டது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பெயரளவில் மாற்றும் முயற்சிகளும் கனகச்சிதமாக நடந்தது. அப்போது டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கலானது. அந்த மனுவில், டெல்லி உச்ச நீதிமன்ற நீதிபதி அலுவலகமும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், பச்சைக் கொடி காட்டியது.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கலானது. அந்த மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் விசாரித்து வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளார். அந்த தீர்ப்பு சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது. அந்த தீர்ப்பு, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் உச்ச நீதிமன்றம் வருகிறதா? என்பதை தெளிவுப்படுத்தியுள்ளது. அதுதொடர்பான கேள்விகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டது.
தகவல் அறியும் உரிமை மற்றும் தனியுரிமை ஆகியவை ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என கூறிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு, நீதித்துறையின் சுதந்திரம், அனைத்து விதமான மீறல்களிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினர். தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அலுவலகமும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வரும் என்ற வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை அளித்தனர்.
இந்த வழக்கில் நீதிபதி ரஞ்சன் கோகாயின் வார்த்தைகள் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டியவை. அவர், “நீதித்துறை சுதந்திரம் மற்றும் பொறுப்புகள் ஆகியவை கைகோர்க்க வேண்டும். வெளிப்படைத்தன்மை நீதி சுதந்திரத்தை ஒருபோதும் பாதிக்காது” என்றார். மற்றொரு நீதிபதி சந்திரசூட், நீதித்துறை சுதந்திரம் என்பது நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் சட்டத்திற்கு மேலானவர்கள் என்று குறிக்கும் அர்த்தமல்ல என்று அதிரடி காட்டினார்.
2016ஆம் ஆண்டில் ரஞ்சன் கோகாய் உள்ளிட்ட மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வழக்கை கையிலெடுத்தது. முன்னதாக இந்த வழக்கு 6 ஆண்டுகளாக நிலுவையில் இருந்தது. அப்போது வழக்குரைஞர்கள் மற்றும் நீதிபதிகளின் கண்முன்னே பல கேள்விகள் இருந்தது. இது ஒரு அரசியலமைப்பு அமர்வால் விசாரிக்கப்பட வேண்டும். நீதித்துறை சுதந்திரத்தை பாதுகாக்க தகவல்களை நிறுத்தி வைப்பது அவசியமா? தகவல் கேட்பது நீதித்துறை கடமைகளில் தலையிடும் செயலா? என்பன போன்ற வேறுசில கேள்விகளும் இயல்பாய் எழும்பின.
இவ்வாறான சூழலில்தான், எந்த பக்கமும் சாயாத ஒரு தீர்ப்பை நீதிபதிகள் வழங்கியுள்ளனர். இந்த தீர்ப்பு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை மேலும் மேம்படுத்துகிறது. வயதுகடந்த சட்டங்களை சாதகமாகப் பயன்படுத்தி அரசாங்கங்கள் தங்கள் ஊழல் செயல்களை மறைக்க முயன்றனர். அப்போது சரியான நேரத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கு முடிசூட்டியது உயர் நீதிமன்றம்.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் ஊழலைக் களையக்கூடிய நம்பிக்கையின் கதிர்களைக் கொண்டது. இந்திய தலைமை நீதிபதி உள்ளிட்ட நீதிபதிகளின் சொத்துகள் தொடர்பான தகவல்களில் வெளிப்படைத்தன்மை கோரி சுபாஷ் சந்திர அகர்வால் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் மறுத்தபோது இந்த சர்ச்சை தொடங்கியது. தலைமை நீதிபதி தகவல் அறியும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வருவதா? என மோதல் எழுந்தது.
இந்திய ஜனநாயகத்தில், குடிமக்களே மிக உயர்ந்தவர்கள். இந்திய அரசியலமைப்பின் 19ஆவது பிரிவு அதன் அனைத்து குடிமக்களுக்கும் பேச்சுரிமை மற்றும் கருத்து சுதந்திரத்திற்கான உரிமையை உறுதி செய்கிறது. அவர்களின் அரசியலமைப்பு தகவல் உரிமை இந்த நோக்கத்தின் கீழ்தான் வருகிறது.
தேர்தலில் போட்டியிடும் போட்டியாளர்கள் தங்களது அனைத்து விவரங்களையும் வாக்காளர்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே தெளிவான உத்தரவுகளை வழங்கியுள்ளது. தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில் அரசாங்க தகவல்களை தடுக்க முடியாது எனவும் இந்தாண்டு உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது. சமீபத்திய தீர்ப்பின் மூலம் அது மீண்டும் உறுதியாகியுள்ளது.
இந்தியாவின் தகவல் அறியும் உரிமைச் சட்டம் உலகின் ஐந்து சிறந்த செயல்களில் ஒன்றாகப் போற்றப்படுகிறது. இருந்தாலும், அரசாங்கத்தின் அக்கறையின்மை காரணமாக சமீபத்தில் 6ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டது. பத்திரிகை மற்றும் தகவல் அறியும் ஆர்வலர்களின் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது.
இந்த நேரத்தில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக அமைந்துள்ளது. இனி வரும் காலங்களில் அரசியல் கட்சிகள், தகவல் அறியும் உரிமைச் சட்ட கண்களிலிருந்து தப்பிக்க முடியாது. நீண்ட காலமாக தப்பித்து வந்தவர்கள், பொதுமக்களுக்கு நிச்சயம் பதிலளிக்க நேரிடும். இது இன்னமும் வெளிப்படைதன்மையாக மாற்றப்படும்போது ஜனநாயகத்தின் பெருஞ்சிறப்பை பொதுமக்கள் காண முடியும்.
இதையும் படிங்க: தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் உச்ச நீதிமன்ற அலுவலகம்