கரோனா வைரஸ் நோயைக் கட்டுப்படுத்தும் வகையில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக பல்வேறு தரப்பினர் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக, வெளிமாநில தொழிலாளர்கள் அடிப்படை வசதிகளின்றி கடுமையாக பாதிக்கப்பட்டனர். சொந்த மாநிலத்துக்கு நடந்தே செல்லும் நிலைமை அவர்களுக்கு ஏற்பட்டது.
இந்நிலையில், வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த மாநிலத்துக்கு சென்றால் நிலைமை மோசமடைந்து வறுமை அதிகரிக்கும் என உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதி ரமணா கருத்து தெரிவித்துள்ளார். வீடியோ கான்பரன்சிங் மூலம் நடத்தப்பட்ட புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட அவர், "வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த மாநிலத்துக்கு சென்ற வண்ணம் இருக்கின்றனர். இது பெரிய அளவில் தொடர்ந்தால், வறுமை, சமத்துவமின்மை, பாகுபாடு அதிகரிக்கும். இந்தப் பேரிடர் காலத்தில் பெண்கள், குழந்தைகள், மூத்த குடிமகன்கள் ஆகியோரின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன.
இந்த பிரச்னையை தீர்க்க செயல் திட்டம் தேவை. அது அனைவரும் ஒன்றிணைந்தால் முடியும். மூன்று மாதங்கள் கடந்த நிலையிலும், நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. ஊரடங்கால் ஆயிரக்கணக்கான மக்கள் வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் இழந்துள்ளனர். மக்கள் பெரிய அளவில் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு சென்றுள்ளனர்.
இது உளவியல் பிரச்னைகளை உருவாக்கி குடும்பத்தில் வன்முறையை அதிகரிக்கச் செய்துள்ளது. பெண்களின் வேலைப்பளு அதிகரித்துள்ளது. குழந்தைகளால் பள்ளிகளுக்கு செல்ல முடியவில்லை. வீட்டிலிருந்து பணிபுரிவதால் குடும்ப வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது" என்றார்.
இதையும் படிங்க: ஏர்டெல் நிறுவனத்தில் முதலீடு செய்கிறது அமேசான்!