டெல்லி ஆம் ஆத்மி அரசு, நகராட்சி மற்றும் துப்புரவு தொழிலாளர்களுக்கு வழங்கவேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க உத்தரவிடுமாறு, ராகுல் பிர்லா என்பவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு இன்று காணொலி காட்சி மூலம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, கரோனா ஊரடங்கினால் மாநில அரசின் வருவாய் முற்றிலும் குறைந்துள்ளதாகவும், இதன் மூலம் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கு காலதாமதம் ஆகிவருவதாகவும் அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறினார்.
மேலும், அரசின் வருவாய் குறைந்தாலும், ஊழியர்களுக்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் விரைவில் செய்து தரப்படும் என உறுதியளித்தார்.
இதனைக் கேட்ட நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கைக்கு இந்த வார்த்தைகள் தீர்வாக அமையாது என்றும், ஊழியர்களுக்கு ஊதியம் அளிப்பது தொடர்பாக முடிவெடுத்து நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் எனவும் உத்தரவிட்டு வழக்கை ஆகஸ்ட் மாதம் பத்தாம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.