அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 3ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதிபர் தேர்தலில் போட்டியிடும் இரு கட்சி வேட்பாளர்களும் பல்வேறு விவகாரங்கள் குறித்து நேருக்கு நேர் விவாதிப்பது வழக்கம்.
அந்த வகையில், அதிபர் வேட்பாளர்களான டொனால்டு ட்ரம்ப், ஜோ பிடனுக்கு இடையே கடந்த மாதம் 29ஆம் தேதி ஒஹிகோ மாகாணத்தில் முதல் நேரடி விவாதம் நடைபெற்றது. ட்ரம்பிற்கு கரோனா உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து இரண்டாவது விவாதம் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், நேற்று(அக். 22) நடைபெற்ற மூன்றாவது விவாதத்தில் பேசிய அதிபர் ட்ரம்ப், "சீனா, ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகளை பாருங்கள். அங்கு காற்றின் தரம் மிக மோசமாக உள்ளது. ட்ரில்லியன் கணக்கில் டாலர்களை செலவு செய்தபோதிலும் ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால்தான் பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்திலிருந்து வெளியேறினோம். இதனால் லட்சக்கணக்கான வேலைகளை இழக்கவும் ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகளை இழக்கவும் நான் விரும்பவில்லை" என்றார்.
இதற்கு இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன. இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் தனது ட்விட்டர் பக்கத்தில், "ட்ரம்பின் கூற்றுப்படி நட்பின் இலக்கணம்
- இந்தியாவின் கரோனா உயிரிழப்பு விதத்தை சந்தேகிப்பது.
- இந்தியா காற்றை அசுத்தம் ஆக்குகிறது என்றும் இந்தியா காற்று அசுத்தமானது என்றும் கூறுவது
- இந்தியாவை "வரிகளின் மன்னர்" என்று அழைப்பது
“ஹவுடி மோடி” நிகழ்ச்சியின் விளைவு" என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, கடந்த மாதம் 29ஆம் தேதி நடைபெற்ற விவாதத்தின்போது, கரோனா உயிரிழப்புகள் குறித்த இந்தியாவின் தரவுகளின் நம்பகதன்மை குறித்து அதிபர் ட்ரம்ப் கேள்வி எழுப்பியருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இதுதான் அமெரிக்க அதிபரின் ட்விட்டர் பாஸ்வேர்டு?