இந்திய - சீன எல்லைப்பகுதியான லடாக்கில் இரு ராணுவத்தினருக்கும் இடையே நடைபெற்ற மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணமடைந்துள்ளனர். சீனாவின் அத்துமீறல் நடவடிக்கை காரணமாக இந்தியாவில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
பலர் சீன கொடிகள், அதிபரின் புகைப்படங்கள், கொடும்பாவிகளை எரித்தும், சீன நிறுவனங்கள் செயல்படும் வளாகங்களை முற்றுகையிட்டும் தங்கள் எதிர்ப்பை தொடர்ச்சியாகக் காட்டிவருகின்றனர். மேலும் பலர் சீனாவிலிருந்து இறக்குமதி செய்து சீனப் பொருட்களை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் எனத் தெரிவித்துவருகின்றனர்.
இந்நிலையில், மத்திய அமைச்சரும் ஆர்.பி.ஐ கட்சித் தலைவருமான ராம்தாஸ் அத்வாலேவின் புதிய கோரிக்கை அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. சீனா இதுபோன்ற அத்துமீறலை மேற்கொள்ளும் நிலையில் இனி இந்திய உணவகங்களில் சைனீஸ் உணவு வகைகள் எதுவும் விற்பனை செய்யக்கூடாது. சைனீஸ் உணவுகளை விற்கும் உணவகங்களை மாநில அரசு சீல் வைக்க வேண்டும். மக்கள் அனைவரும் இனி சைனீஸ் உணவுகளை புறக்கணிக்க வேண்டும் என பகீர் கோரிக்கையை வைத்துள்ளார்.
மேலும், சீனர்களின் இலக்கியத்தை கூட இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். சீனாவில் உற்பத்தியாகும் பொருட்களை இந்தியா தடை செய்தால் அந்நாட்டிற்கு பொருளாதார ரீதியாக அழுத்தம் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. அதேவேளை சைனீஸ் நூடூல்ஸ், கோபி மஞ்சூரியன் போன்ற உணவுகளை இந்தியர்கள் சாப்பிடாமல் இருந்தால், சீனாவுக்கு என்ன நஷ்டம். இந்த அடிப்படை கூட தெரியாமல் மத்திய அமைச்சர் ஒருவர் கருத்து தெரிவித்து தற்போது சமூக வலைதளத்தில் மீம்ஸ் மெட்டீரியலாக மாறியுள்ளார்.
ஏற்கனவே இவர் இசை மூலம் கரோனாவை விரட்ட 'கரோனா கோ கரோனா கோ' என்ற பாடல் ஒன்றை இயற்றி கரோனாவுக்கு துன்பம் கொடுத்து, மன அழுத்தத்தில் உள்ள மக்களுக்கு இன்பம் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டத்தை தொடங்கிவைக்கும் மோடி