மாநிலங்களவை தேர்தலுக்கு முன்னதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை, பாஜக "கவர்ந்திழுப்பதை" தடுக்கும் விதமாக அவர்கள் ஜெய்ப்பூர்-டெல்லி பிரதான சாலையிலுள்ள சொகுசு நட்சத்திர விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அவர்கள் நேற்று (திங்கள்கிழமை), பொருளாதாரம் மற்றும் கரோனா வைரஸ் தொற்றுநோய் பற்றி விவாதித்தனர். இதைத்தொடர்ந்து கிரிக்கெட் மற்றும் பூப்பந்து விளையாட்டில் கவனம் செலுத்தினார்கள். மேலும் தீபிகா படுகோன் நடித்துள்ள சப்பாக் படத்தையும் கண்டு ரசித்தனர்.
இந்நிலையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் அவினாஷ் பாண்டே கூறுகையில், “மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் புதன்கிழமை (ஜூன்19) வரை நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் மற்றும் ஆதரவு எம்.எல்.ஏ.க்களும் இங்குதான் இருப்பார்கள்.
கர்நாடகா, மத்தியப் பிரதேசத்தில் வெற்றி பெற்ற பாஜகவின் திட்டம், ராஜஸ்தானில் நடக்காது” என்றார். மேலும், “அவர்கள் ஒரு குடும்பம் போல் தங்கியிருப்பதாகவும் இதுவும் ஒரு ஆசிர்வாதமே” என்றும் கூறினார்.
ராஜஸ்தானில் காலியாகவுள்ள மாநிலங்களவை பதவிக்கான மூன்று இடங்களுக்கு காங்கிரஸ் சார்பில் கே.சி வேணுகோபால், நீரஜ் டாங்கி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
அதேபோல் ராஜேந்திர கெஹ்லோட் மற்றும் ஒன்கர் சிங் லகாவத் ஆகியோர் பாஜக சார்பில் போட்டியிடுகின்றனர். இதில் காங்கிரஸ் இரு இடங்களிலும், பாஜக ஒரு இடத்திலும் வெல்ல சாத்தியக் கூறுகள் உள்ளன. ஆனால் பாஜக சார்பில் இரு வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளதே குழப்பத்துக்கு காரணம்.
இதையும் படிங்க: காணொலி: யோகா, கால்பந்து அசத்தும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்!