இந்தியாவில் கடந்த சில வாரங்களுக்கு முன் அசாம், மேற்கு வங்கம் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்ததன் விளைவாக பல்வேறு மாவட்டங்கள் நீரில் மூழ்கி பொருள் மற்றும் உயிர் சேதத்திற்கு உள்ளாகின.
அசாமிலுள்ள ஆசியாவின் மிகப் பெரிய வனவிலங்கு பூங்காவான காசிரங்கா பூங்காவில், ஏராளமான விலங்குகள் நீரில் மூழ்கி பலியாகின. இதற்கிடையில், கேரளாவில் சில தினங்களுக்கு முன் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 40க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
தற்போது கர்நாடக மாநிலத்தில் கனமழை காரணமாக பல்வேறு ஆறுகளில் நீர்மட்டம் அதிகரித்தது. இதன் விளைவாக பல்வேறு அணைகள் நிரம்பி வழிகின்றன. இதனால் ஏற்படும் சேதத்தினைத் தடுக்க அணைகளிலிருந்து நீர் அதிகளவு திறந்துவிடப்பட்டுவருகிறது.
கர்நாடக மாநிலத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள பல்வேறு வனப் பகுதிகள் இந்த கனமழையில் மூழ்கி பெரும் பாதிப்பை சந்தித்துவருகின்றன. வனத்தில் வாழும் உயிரனங்களும் தங்களை கனமழையிலிருந்து தற்காத்துக்கொள்ள போராடிவருகின்றன.
இந்நிலையில், தாவணகேர் மாவட்டம் ராஜனஹள்ளியில் உள்ள துங்கபத்ரா ஆற்றில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியதில் தங்களது வசிப்பிடங்களை இழந்து உணவு தேடி 55 குரங்குகள் செய்வதறியாது தவித்துவந்தன.
இதனையறிந்த வன மற்றும் தீயணைப்புத் துறையினர், மரங்களில் சிக்கித் தவிக்கும் குரங்குகளை படகுகள் கொண்டு மீட்கும் முயற்சியில் இறங்கினர். இது பலனளிக்காமல் போனதால், கயிற்றின் மூலம் பாலம் அமைத்து அனைத்து குரங்குகளையும் ஒரே மரத்திற்கு வரவழைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இந்த முயற்சியில், ஒரே நாளில் 50 குரங்குகள் மீட்கப்பட்டன. மூன்று நாள் போராட்டத்திற்குப் பிறகு ஆற்று நீரோட்டத்தில் சிக்கித் தவித்த அனைத்து குரங்குகளும் மீட்கப்பட்டுள்ளன.
வன மற்றும் காவல்துறையினரின் முழு ஒத்துழைப்பால் இந்த கடினமான முயற்சியில் வெற்றிபெற்றதாக தீயணைப்பு படையினர் தெரிவித்தனர்.