புதுச்சேரியில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த 23ஆம் தேதி முதல் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் அமைப்புசாரா தொழிலாளர்கள், கட்டடத் தொழிலாளர்கள், ஆட்டோ, ரிக்சா ஓட்டுநர்கள், விவசாயிகள், மீனவர்கள், தினக்கூலி வேலை செய்பவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.
இதனைக் கருத்தில்கொண்டு, புதுச்சேரியில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா இரண்டாயிரம் ரூபாய் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையே புதுச்சேரி முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "புதுச்சேரியில் தொழிற்சாலைகளில், நிறுவனங்களில் வெளிமாநிலத்திலிருந்து தங்கி பணிபுரிபவர்களுக்கு எவ்வித பிடித்தமின்றி முழு ஊதியத்தை வழங்க வேண்டும். மேலும் புதுச்சேரியில் தங்கி பணிபுரிந்துவரும் வெளிமாநில தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோரிடம் இந்த மாத வாடகை கேட்டு வலியுறுத்தக் கூடாது என்று ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து கோயில், வக்பு வாரிய இடங்களில் குடியிருப்போர்களிடம் மாத வாடகை வசூலிப்பதை மூன்று மாதங்கள் வரை ஒத்திவைக்க வேண்டும் என்றும், வர்த்தக ரீதியாக வாடகைக்குப் பயன்படுத்துபவர்களிடம் ஒரு மாத வாடகை வசூலிக்கக் கூடாது என்றும் இந்து அறநிலை துறைக்கும், வக்பு வாரியத்திற்கும் முதலைமைச்சர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அத்தியாவசியத்துக்கு வெளியே செல்வோர் அனுமதி கடிதம் பெற்று செல்ல வேண்டும் - மாவட்ட நிர்வாகம்!