உலகெங்கும் கரோனா தொற்று பாதிப்பு அச்சுறுத்திவருகிறது. உலகிலேயே அதிகமாக கோவிட்-19 தொற்று பாதித்தோரின் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது. தொடர்ச்சியாக நான்கு நாள்களாக 10 ஆயிரம் பேர் கோவிட்-19 தொற்றால் இந்தியாவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணிநேரத்தில் தொற்று பாதிக்கப்பட்ட 6,166 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்ட மொத்த நோயாளிகளுடன் ஒப்பிடும்போது, கரோனாவிலிருந்து மீண்ட நோயாளிகளின் எண்ணிக்கை 49.21 விழுக்காட்டை எட்டியுள்ளது.
கோவிட்-19ஐ கையாளுவதற்காக, மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தல், மருத்துவ மேலாண்மை, அதிகமான பரிசோதனை உள்ளிட்டவற்றை மேம்படுத்த வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும், வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த, ஆபத்தான பகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்தவேண்டும் என்றும், கட்டுப்பாடு மண்டலங்களில் உள்ள குழுவை வைத்து வீடு வீடாகச் சென்று பரிசோதனை செய்து, கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை முன்கூட்டிய கண்டறிய வேண்டும் எனவும் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
போதுமான மருத்துவ உபகரணங்கள், பயிற்சியளிக்கப்பட்ட மருத்துவர்கள், செவிலியர், மருத்துவப் பணியாளர்கள் உள்ளிட்டோர்களின் எண்ணிக்கையை மேம்படுத்துவதோடு மருத்துவமனை உள்கட்டமைப்பை விரைவுபடுத்துமாறு மாநில அரசுகளை மத்திய சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
இதையும் படிங்க: கோயம்பேடுக்கு டஃப் கொடுக்கப்போகிறதா டெல்லி ஆசாத்பூர் சந்தை?