சர்வதேச தொழிலாளர் மாநாடு (ஐ.எல்.சி) கரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து இந்த வாரம் விவாதிப்பதாக இருந்தது. அவற்றில் நாட்டு மக்களின் பாதுகாப்பு, பணி புரிவோரிடம் காட்டப்படும் ஏற்றத்தாழ்வுகள், அவர்களின் தரநிலைகள், தர நிர்ணயக் குழுவால் மேற்கொள்ளப்படும் முக்கியமான பணிகள் குறித்தும் விவாதிக்கப்படயிருந்தது.
கரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் உலகளவில் அனைவரையும் நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது. இதில், சுகாதாரம், சில்லறை விற்பனை, உணவு உற்பத்தி உள்ளிட்ட முக்கிய சேவைத் துறைகளில் பணிபுரிபவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குப் போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படவில்லை என்பன உள்ளிட்ட பிரச்னைகளின் முக்கியத்துவத்தை கருத்தில்கொண்டு, சர்வதேச தொழிலாளர்கள் அமைப்பு, விவாதிக்கவுள்ளது.
அதே நேரத்தில், கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் நாட்டில் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வேலை இழப்பு, மக்கள் பாதுகாப்பின்மை ஆகியவற்றால் வாழ்வாதாரத்தை இழந்து தவித்துவருகின்றனர். வறுமையின் பிடிக்குத் தள்ளப்பட்ட அவர்கள் தங்களது குடும்பங்களுக்கு உணவளிக்க முடியாத சூழலில் சிக்கித் தவிக்கின்றனர்.
இதுபோன்ற பிரச்னைகளுக்குத் தீர்வு காண உலகளாவிய மக்களின் பாதுகாப்பு முன்னெப்போதும் இல்லாத அளவைவிட அதிகமாக தேவைப்படுகிறது. மக்கள் பாதுகாப்பை நடைமுறைப்படுத்துவதற்கான உலகளாவிய ஒருங்கிணைந்த முயற்சிகளுக்கு அவசரத் தேவை ஏற்பட்டுள்ளது. இதற்காக பல நாடுகள், பிராந்தியங்கள் உறுதியான ஆதரவை வழங்கிவருகின்றன.
இந்த நெருக்கடியான சூழலில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது பெண்களே. புலம்பெயர்ந்த பெண் தொழிலாளர்கள் பலர் அத்தியாவசியத் தேவைகளுக்கும், சுகாதாரத்தைப் பேணுவதற்கும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். குறைந்த ஊதியத்தில் சுகாதாரமற்ற சூழல்களில் பணியாற்றிவந்த இவர்கள், தற்போது கரோனாவால் மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர்.
முறைசாரா பொருளாதாரத்திலும், உலகளவில் கடைநிலையில் உள்ள தொழிற்சாலைகளிலும் பணிபுரிந்து வரும் பெண்கள், எந்தவொரு பாதுகாப்பும் இன்றி தங்கள் வேலையை இழந்து வருகின்றனர். உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடியான சூழலில் பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனை கையாளுவதற்கும், இந்த சூழலில் இருந்து பெண்கள் காத்துக்கொள்வதற்கும் வலுவான அணுகுமுறைகளை கொண்டிருக்கவேண்டும்.
கோடிக்கணக்கான தொழிலாளர்களுக்கு, இந்த கரோனா நெருக்கடி பல துயரங்களை அளித்துள்ளது. இந்த நெருக்கடி தற்போதுள்ள ஏற்றத்தாழ்வுகளை மேலும் மோசமாக்குகிறது. பல்வேறு நாடுகளிலும் பிராந்தியங்களிலும் அமைந்துள்ள தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் உரிமைகள், பாதுகாப்பிற்காக துணைநிற்கின்றன.
இவர்களுக்கான நிவாரண நடவடிக்கைகள் மற்றும் மீட்புத் திட்டங்களைப் பற்றி சர்வதேச தொழிலாளர் அமைப்பு விரைவில் விவாதிக்கவேண்டும். தற்போதைய நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான எந்தவொரு திட்டத்திலும் தொழிலாளர்களின் உரிமைகள்,சமூக நீதி ஆகியவற்றிக்கு சர்வதேச அமைப்புகள் முக்கியத்துவம் அளிக்கவேண்டும்.