காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான அரசாங்கம் எவ்வாறு இந்தியப் பொருளாதாரத்தை அழித்து வருகிறது என்ற தலைப்பில் தொடர் காணொலிகளை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில், அவர் இன்று (செப்.06) ஜிஎஸ்டி குறித்து தனது மூன்றாவது காணொலியை வெளியிட்டுள்ளார். அதில் ”தேசிய ஜனநாயகக் கூட்டணி அமல்படுத்தியுள்ள ஜிஎஸ்டி வரி விதிப்பு, முறையாக பின்பற்ற ஏதுவானதாக அமையவில்லை. மாறாக அது நாட்டின் ஏழை மக்கள்மீது மிகப் பெரிய தாக்குதலை நடத்தி வருகிறது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி சரிவிற்கும் இது காரணமாக அமைந்துள்ளது.
இந்த முறை லட்சக்கணக்கான சிறு தொழில்களையும், வருங்கால வேலைவாய்ப்புகளையும், இளைஞர்களின் எதிர்காலப் பொருளாதார நிலையையும் அழித்து வருகிறது. இந்தக் கரோனா காலகட்டத்தின் முதல் காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் 23.9 விழுக்காடாகக் குறைந்துள்ளது.
ஜிஎஸ்டி என்பது காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியின் யோசனை. எங்களது யோசனை, வரிகளைக் குறைத்து எளிமையானதாக மாற்ற அறிவுறுத்தியது. ஆனால் மோடி தலைமையிலான அரசு, ஜிஎஸ்டி மூலம் முறைசாரா பொருளாதாரத்தின் மீது மிகப் பெரிய தாக்குதலை நடத்தி வருகிறது.
மத்திய அரசு நடைமுறைப்படுத்தியுள்ள ஜிஎஸ்டி முறையானது, 28 விழுக்காடு வரையிலான நான்கு வெவ்வேறு வரிகளைக் கொண்டுள்ளது. இது மக்களுக்கு குழப்பத்தை உண்டாக்கும். இந்த விதிமுறைகளால் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் பல்வறு பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றன.
அதே சமயத்தில் பெரு நிறுவனங்கள் வரி விதிப்பிலிருந்து விலக்குகளைப் பெறுகின்றன. 15 முதல் 20 பெரு நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான முறையில், விதிகளையே மாற்ற இயலும் சூழலும் உள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணி அமல்படுத்திய ஜிஎஸ்டியின் விளைவு என்ன? முதல்முறையாக, மத்திய அரசு, மாநிலங்களிடமிருந்து வசூல் செய்யப்பட்ட ஜிஎஸ்டி தொகையை மீண்டும் செலுத்த இயலாத சூழலை சந்தித்துள்ளது.
அனைத்து மாநில அரசுகளும், ஆசிரியர்களுக்கும், பிற ஊழியர்களுக்கும் ஊதியம் வழங்க முடியாத நிலையில் உள்ளன. எனவே, மத்திய அரசின் ஜிஎஸ்டி முறையானது தோல்வி அடைந்துள்ளது. இது ஏழைகள் மற்றும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் மீதான தாக்குதலாக மாறியுள்ளது.
ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை இந்தியாவின் ஏழைகள், விவசாயிகள், வணிகர்கள் மீதான தாக்குதலாக மாறியுள்ளது. இந்தத் தாக்குதலுக்கு எதிராக நாம் போராட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.