கரோனா வைரஸ் நோயின் தாக்கத்தால் பொருளாதாரம் பெரும் சரிவை சந்தித்துள்ளது. இதனிடையே, இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்து பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி தரும் கடன்களுக்கான ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 4 விழுக்காட்டிலிருந்து 3.75 விழுக்காடாக குறைப்பு, பாதிப்புகளைச் சரிசெய்ய மாநில அரசுகள் 60 விழுக்காடுவரை கூடுதலாகக் கடன் பெறலாம், விவசாயம், சிறு, குறு தொழில்செய்வோர் ஆகியோருக்கு கடன் வழங்கும் வகையில் நபார்டு, தேசிய வீட்டுவசதி வங்கி (என்.ஹெச்.பி.), சிறுதொழில் வளர்ச்சி வங்கி உள்ளிட்ட வங்கிகளுக்கு ரூ.50 ஆயிரம் கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு போன்ற பல அறிவிப்புகள் அதில் இடம்பெற்றன.
இதனை விமர்சித்த காங்கிரஸ், தேவையை அதிகரித்து பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்குப் பதில் சந்தை பணப்புழக்கத்தில் இந்திய ரிசர்வ் வங்கி கவனம் செலுத்தியுள்ளது எனத் தெரிவித்துள்ளது.
செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா, "விகிதத்தை பெருந்தொற்று பெரிய அளவில் பாதித்தது. நோயைக் கட்டுப்படுத்தும்விதமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் வர்த்தக செயல்பாடுகள் முழுவதுமாக முடங்கியுள்ளன.
தேவையை அதிகரிப்பதன் மூலமே மக்களிடையே பணத்தைக் கொண்டுசேர்க்க முடியும். ஆனால், அதில் கவனம் செலுத்துவதற்குப் பதில் வங்கிகளின் பணப்புழக்கத்தை அதிகரிக்க வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. கரோனாவால் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ள வங்கிசாரா நிதி நிறுவனங்கள் வாராக்கடனில் சில தளர்வுகளை எதிர்பார்க்கிறது" என்றார்.
இதையும் படிங்க: 'மாநில அரசுகள் கூடுதல் கடன் பெறலாம்; விவசாயிகளுக்கு ரூ.50 ஆயிரம் கோடி' - ஆர்பிஐ ஆளுநர்