நடந்து முடிந்த 17ஆவது மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ளார். இதனையடுத்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் புதிய மசோதாக்களையும், காலாவதியான மசோதாக்களையும் தாக்கல் செய்ய மோடி அரசு திட்டமிட்டிருந்தது.
அதன்படி, கடந்த வெள்ளிக்கிழமையன்று சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், முத்தலாக் தடை மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்தார். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.
இந்நிலையில் இன்று காலாவதியான ஆதார் மசோதா, பொதுப்பிரிவில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான இட ஒதுக்கீடு மசோதாவை மீண்டும் மக்களவையில் சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தாக்கல் செய்துள்ளார்.
முன்னதாக முத்தலாக் தடை மசோதா, ஆதார் மசோதா, பொதுப்பிரிவில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா ஆகியவை மக்களவையில் நிறைவேற்றப்பட்டு, மாநிலங்களவையில் ஆறு மாதத்தில் நிறைவேற்றாததால் காலாவதியானது என்பது குறிப்பிடத்தக்கது.