ஜெனரிக் ஆதார் என்ற நிறுவனம் மகாராஷ்டிர மாநிலம் தானே பகுதியை சேர்ந்த அர்ஜுன் தேஷ்பாண்டே என்பவரால் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நிறுவப்பட்டது. இது நாட்டின் முன்னணி மருந்து உற்பத்தியாளர்களிடமிருந்து தரமான மருந்துகளை குறைந்த விலையில் பெற்று, சந்தையில் உள்ள விலையை 20-30 சதவீதம்வரை மலிவான விலைக்கு வழங்குகிறது.
தானேவின் டிஏவி பப்ளிக் பள்ளியின் முன்னாள் மாணவரான அர்ஜுன் தேஷ்பாண்டே , ஏழைகளுக்கு மலிவு விலையில் மருந்துகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் தனது தொழில் முனைவோர் பயணத்தைத் தொடங்கினார். இந்த நிறுவனத்தில் டாடா எவ்வளவு முதலீடு செய்துள்ளார் என்பதை வெளியிடவில்லை. டாடாவின் முதலீடுகள் அனைத்தும் அவரது முதலீட்டு நிறுவனமான ஆர்என்டி அசோசியேட்ஸ் மூலம் செலுத்தப்படுகின்றன. அவரது முதலீடுகளில் ஓலா, பேடிஎம், ஸ்னாப் டீல், க்யூர்ஃபிட், அர்பன் லேடர் மற்றும் அவந்தி ஃபைனான்ஸ் ஆகியவை அடங்கும்.
இந்த நிறுவனம் மருந்துகளை உற்பத்தியாளர்களிடமிருந்து நேரடியாக பெற்று, சில்லறை விற்பனையாளர்களுக்கு 16-20 சதவீதம்வரை விலை குறைவாக விற்கிறது.
ஸ்டார்ட்-அப் ஆண்டு வருமானம் ரூ 6 கோடி என்றும் அடுத்த மூன்று ஆண்டுகளில் ரூ 150-200 கோடி வருவாயைப் ஈட்டியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. இதன்மூலம் மருந்தாளுநர்கள், ஐடி பொறியாளர்கள் மற்றும் சந்தைப்படுத்தல் வல்லுநர்கள் உட்பட சுமார் 55 பேருக்கு வேலை கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய தேஷ்பாண்டே கூறியதாவது,
"மலிவு விலையில் சுகாதார சேவையை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளதால் எங்களது வணிக வியூகம் மற்றவர்களை காட்டிலும் மேலோங்கியுள்ளது. மூத்த குடிமக்களுக்கும், ஓய்வூதியதாரருக்கும் மலிவான மருந்துகளை வழங்குவதே எங்கள் நோக்கம்.
தற்போது, இது நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்த மருந்துகளை வழங்குகிறது என்றும், விரைவில் புற்றுநோய் மருந்துகளை சந்தை விலையை விட குறைந்த கட்டணத்தில் வழங்கவுள்ளது. மேலும் பால்கர், அகமதாபாத், புதுச்சேரி மற்றும் நாக்பூரில் உள்ள நான்கு WHO-GMP சான்றளிக்கப்பட்ட உற்பத்தியாளர்களுடன் இந்நிறுவனம் விரைவில் ஒப்பந்தம் செய்யவுள்ளது" எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தங்களது வணிகத் திட்டத்தில் ஈர்க்கப்பட்ட டாடா, இதில் ஒரு பகுதியாக இருக்க முடிவு செய்தார். மேலும் அதிகமான ஏழை மக்களுக்கு மருத்துகள் மலிவான விலையில் சென்றடைய இந்த ஜெனரிக் ஆதார் உதவுகிறது" என்று அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அர்ஜுன் தேஷ்பாண்டே கூறினார்.
தேஷ்பாண்டே ஆயிரம் மருந்தகங்களுடன் கூட்டு சேர்ந்து குஜராத், தமிழ்நாடு, ஆந்திரா, டெல்லி, கோவா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் தனது நிறுவனத்தை விரிவாக்க திட்டமிட்டுள்ளார்.
இதையும் பார்க்க: புலிட்சர் விருது பெற்றவர்கள் திருடர்கள் - செய்தியாளர்களை விமர்சித்த ட்ரம்ப்