ஆரம்ப காலகட்டத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்த என்.பாஸ்கர ராவ், பின்னர் அரசியல் வாழ்க்கைக்குள் நுழைந்தார். 1978 ல் சென்னா ரெட்டியின் அமைச்சரவையில் இடம்பெற்றார். 1982ல் என்.டி ராமா ராவுடன் இணைந்து தெலுங்கு தேச கட்சியை உருவாக்கியதில் பெரும் பங்கு வகித்தார். அக்கட்சி 1983யில் ஆந்திராவில் ஆட்சியைப் பிடித்த என்.டி ராமராவ் அமைச்சரவையில் என். பாஸ்கர ராவ் நிதியமைச்சர் ஆனார். ஒன்றரை வருடத்திற்குப் பிறகு என்.டி. ராமாராவ், ஆஞ்சியோ கிராம் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற பிறகு தெலுங்கு தேச கட்சியை வழி நடத்தினார்.
மத்தியில் ஆண்டு கொண்டிருந்த காங்கிரஸ் கட்சியின் உதவியால் 1984ல் ஆந்திராவின் முதலமைச்சர் ஆனார். இது ஜனநாயகத்திற்கு எதிரானது என்று கூறி இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் பாஜக உட்பட 17 எதிர்க் கட்சிகள் சேர்ந்து எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில் சிகிச்சை முடித்துத் திரும்பிய என்.டி ராமாராவ் முதலமைச்சர் பதவி பறிபோனதைக் கண்டு அதிர்ந்து போனார்.
மேலும், என். பாஸ்கர ராவ் அரசுக்கு எதிராக 'தர்ம யுத்தம்' என்ற பெயரில் போராட்டம் செய்ததைத் தொடர்ந்து மீண்டும் ராமாராவ், ஆந்திர முதலமைச்சரானார். முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டவர் மறுபடியும் முதலமைச்சராக நியமித்தது இந்தியாவில் அதுவே முதல் முறையாகும்.
அதன் பின் என்.பாஸ்கர ராவ் 31 நாள் தான் பதவி வகித்த முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். 1998ஆம் ஆண்டு நடந்த 12ஆவது பாராளுமன்ற தேர்தலில் கம்மம் தொகுதியில் வெற்றி பெற்றார். தற்போது காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறி பாஜக தலைவர் அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார். இந்நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.