நேற்று (ஜூலை 18) ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளைத் தலைவர் மகந்த் நிருத்ய கோபால் தலைமையில், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானம் தொடர்பான கூட்டம் நடைபெற்றது. சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இக்கூட்டத்தில், அனைத்து உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். இதில், கோயிலின் கட்டுமானம் தொடர்பான அனைத்து விஷயங்களும் விவாதிக்கப்பட்டன.
இதுகுறித்து அறக்கட்டளை உறுப்பினர் காமேஷ்வர் சௌபால் கூறுகையில், ''ராமர் கோயில் 161 அடி உயரம் கொண்டதாக இருக்கும். முன்பு 3 குவிமாடங்கள் அமைக்கப்படும் என்று தீர்மானிக்கப்பட்டிருந்தது. தற்போது இது 5 குவிமாடங்களாக உயர்த்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
விஷ்வ இந்து பரிஷத் பரிந்துரைத்த வடிவமைப்பில் கோயில் கட்டப்படும். அதன் நீளம், அகலம், உயரம் ஆகியவை மட்டுமே அதிகரிக்கப்படும். ராமர் கோயிலைக் கட்டிமுடிக்க மூன்றரை ஆண்டுகள் ஆகும்” என்றார்.
கரோனா வைரஸ் காரணமாக ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டு, கடந்த ஜூன் மாதம் மீண்டும் கட்டுமானப் பணிகள் விறுவிறுப்படைந்துள்ளன.
இதையும் படிங்க:அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானம் - மோடி பங்கேற்பு!