உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியில் இருக்கும் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில், ராமர் கோயிலை கட்ட உச்ச நீதிமன்றம் கடந்த 2019ஆம் ஆண்டு அனுமதி அளித்தது. இந்தப் பணிகளை மேற்பார்வையிட 'ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா' என்ற அறங்காவல் குழு அமைக்கப்பட்டு, ராமர் கோயில் கட்டுமானத்துக்கான ஆயத்த பணிகள் தொடங்கப்பட்டன.
ஜூலை முதல் வாரத்தில் கட்டுமானம் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்தியா-சீனா ராணுவத்திற்கிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக உருவான பதற்றநிலை காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. மேலும், கட்டுமான பணிகள் தொடங்கப்படும் புதிய தேதி இதுவரை உறுதி செய்யப்படாமல் இருந்தது.
இந்நிலையில், ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும் தேதி உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பிரதமர் மோடிக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், நாளை கூடும் அறங்காவல் குழுக் கூட்டத்தில் அக்குழுவின் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா கலந்து கொள்வார் என்றும், அதில் பிரதமர் மோடி பங்கேற்க ஏதுவான ஒரு தேதி உறுதி செய்யப்படும் என்றும் அறங்காவல் குழு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்தத் தொடக்க நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தும் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அயோத்தியில் ராமர் கோயிலைக் கட்டுவது என்பது கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பாஜகவின் முக்கிய தேர்தல் வாக்குறுதியாக இருந்துவருகிறது. இங்கு பூமி பூஜையுடன் கட்டுமானப் பணிகள் வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, கடந்த சில நாள்களுக்கு முன் நேபாள பிரதமர் கே.பி சர்மா ஒலி, ராமர் நேபாள நாட்டைச் சேர்ந்தவர் என்றும், உண்மையான அயோத்தி நேபாளத்தில் உள்ளது என்றும் கூறியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இதையும் படிங்க: ஜியோ தரும் இந்திய தயாரிப்பு தகவல் சாதனங்கள்!