ஹரியானாவில் தேரா சச்சா சவுதாவின் தலைவராக இருக்கும் குர்மீத் ராம் ரஹீம் சிங் மீது இரண்டு பாலியல் வன்கொடுமை, பத்திரிகையாளரை கொலை செய்தது தொடர்பான வழக்குகளில் 20 வருட தண்டனைப் பெற்று அவர் சிறையில் உள்ளார்.
இந்நிலையில் குர்மீத், ஹரியானவின் சிர்சா மாவட்டத்தில் உள்ள தனது வயல்களில் விவசாயம் செய்வதற்காக 42 நாள்கள் பரோல் கேட்டுள்ளதாக காவலர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து ரோதக் சிறையின் உயர் காவல் அலுவலர் கூறுகையில், அவருக்கு பரோல் கேட்டு வழங்கியுள்ள மனுவின் தகுதிகள், குறைபாடுகளைக் கண்டறிந்து அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது எனவும், ஒவ்வொரு வழக்கிலும் பரோல் கேட்பவரின் மனுவின் தகுதிகள், குறைபாடுகளைக் கண்டறிந்து, அதனடிப்படையிலேயே அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
இதையடுத்து சிர்சா மாவட்ட காவல் துறையினருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது. அந்த கடிதத்தில், வருவாய்த் துறையினர் தேராவின் தலைவர் குர்மீத் சொந்தமாக எவ்வளவு நிலம் வைத்துள்ளார் என்பதை உறுதிசெய்ய வேண்டும் எனவும், மேலும் அவர் சிறையில் இதுவரை எந்தக் குற்றச் செயல்களிலும் ஈடுபடவில்லை எனவும் குறிப்பிட்டிருந்தார்.
20 வருட சிறைத் தண்டனையில் ஓராண்டு நிறைவு பெற்ற நிலையில், அண்மையில் குர்மீத் ரோதக் மாவட்டத்தில் உள்ள சுனாரியா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
51 வயதான அவர், தனது வளர்ப்பு மகள் திருமணத்திற்காக கடந்த மாதம் பரோல் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். அதனை பஞ்சாப், ஹரியானா நீதிமன்றம் மறுத்து மனுவை தள்ளுபடி செய்தது.
இது குறித்து அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் அனில் விஜ் கூறுகையில், குர்மீத் ராம் ரஹீம் சிங் மட்டுமில்லை, சிறையில் இருக்கும் எந்தவொரு சிறைக் கைதியும் சட்டப்படி பரோல் கேட்க உரிமையுள்ளது. நிபந்தனைகளுக்கு அவர் ஒப்புக்கொண்டால் பிணை வழங்கப்படும் என தெரிவித்தார்.