ஹிமாச்சல்பிரதேசத்தில் மணாலி கிராமத்து மக்கள் ரக்ஷா பந்தனை வித்தியாசமான முறையில் பல ஆண்டுகளாக கொண்டாடி வருகின்றனர். இவ்விழாவிற்காக சகோதரிகளும், சகோதரனின் மனைவிகளும் ஆவலாக காத்திருப்பார்கள்.
இந்நாளில் சகோதரிகள் கட்டும் ராக்கி கயிற்றை, சகோதரரின் மனைவி கழற்ற முயற்சிப்பார்கள். ஒரு வேளை வெற்றிகரமாக கழற்றிவிட்டால் போட்டியில் சகோதரரின் மனைவி வென்றுவிடுவார்கள். அதே சமயம், கழற்றவிடாமல் சகோதரன் தடுத்துவிட்டால், அவர் வெற்றிபெறுவார்.
இந்த விளையாட்டு தசரா பண்டிகை வரை நடைபெறும் எனக் கூறப்படுகிறது. புராதாண நம்பிக்கையின்படி, தங்கள் சகோதரிகளால் கட்டப்பட்ட ராக்கிகளைப் பாதுகாப்பது ஆண்களின் பொறுப்பாகும்.
இவ்விழா குறித்து பேசிய உள்ளூர்வாசி வித்யா நேகி, " இவ்விழா மணாலியில் கொண்டாடப்படும் ஒரு தனித்துவமான மற்றும் பாரம்பரியமான வழக்கமாகும். இந்த சடங்கை யுகங்களாக பின்பற்றி வருகிறோம். ஆனால், எப்படி இந்தச் சடங்கு நடைமுறைக்கு வந்தது என்பது குறித்து தெரியவில்லை. மக்கள் இந்த வழக்கத்தை மிகுந்த ஆர்வத்துடனும் மகிழ்ச்சியுடனும் கொண்டாடுகிறார்கள்" எனத் தெரிவித்தார்.