மாநிலங்களவையின் 250ஆவது கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. மாநிலங்களவையின் தலைவரான குடியரசுத் துணைத் தலைவருக்கு பாதுகாப்பு அளிக்கும் அலுவலரின் சீருடையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, உடை வெள்ளை நிறத்திலும் தலைப்பாகையுடனும் காணப்பட்டது. தற்போது ராணுவ வீரரின் சீருடைபோல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு, "பல பரிந்துரைகள் பெறப்பட்ட பிறகே மாநிலங்களவை அலுவலரின் சீருடையில் மாற்றம் செய்யப்பட்டது. ஆனால், இது குறித்து சில தலைவர்கள் வேறு ஆலோசனை கூறியுள்ளனர். எனவே, மாநிலங்களவை செயலரிடம் இந்த விவகாரம் குறித்து மறுபரிசீலனை செய்ய உத்தரவிட்டுள்ளேன்" என்றார்.
சீருடை மாற்றம் அரசியல் தலைவர்களை மட்டுமல்லாமல் பாதுகாப்புப் படையினரையும் ஆச்சரியப்படுத்தியது. இது குறித்து பாதுகாப்புப் படை முன்னாள் தளபதி வி.பி. மாலிக், "பாதுகாப்புப் படையைச் சாராத ஒருவர் பாதுகாப்புப் படையினரின் சீருடை அணிவது சட்டவிரோதமானது. இது குறித்து நடவடிக்கை எடுக்க மாநிலங்களவைச் செயலர், பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆகியோரை கேட்டுக் கொள்கிறேன்" எனத் தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க: பயங்கரவாதிகளின் முகாம்களை துல்லியமாக கண்டறியும் பிஎஸ்எல்வி சி-47 வரும் 25ஆம் தேதி ஏவப்படும்!