ஃபிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற ரஃபேல் போர் விமானம் ஒப்படைக்கும் நிகழ்வில், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விமானங்களுக்கு மேல் பூ, தேங்காய் ஆகியவைகளை வைத்தும், அதன் சக்கரங்களுக்குக் கீழே எலுமிச்சைப் பழம் வைத்தும் ’சாஸ்த்ரா பூஜை’ செய்தார். இந்தச் செயலை எதிர்க்கட்சித் தலைவர்களும், சமூக வலைதளவாசிகளும் விமர்சனம் செய்தனர்.
இந்நிலையில், ஃபிரான்ஸிலிருந்து திரும்பிய ராஜ்நாத் சிங் டெல்லி வந்ததும், செய்தியாளர்கள் அவரிடம் பூஜை குறித்து கேள்வியெழுப்பினர். அதற்கு அவர், “எனக்கு எது சரியெனப்பட்டதோ அதை நான் செய்தேன். பூஜையில் அதிக சக்தி இருக்கிறது என்பது நம்முடைய நம்பிக்கை. இதை நான் சிறு வயதிலிருந்தே நம்பிக் கொண்டிருக்கிறேன். இப்பிரச்னை குறித்து காங்கிரஸிலேயே சில முரண்பாடுகள் இருப்பதாகத் தெரிகிறது. இது அனைவருடைய நம்பிக்கையாக இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை” என்று கூறினார்.
காங்கிரஸின் மூத்தத் தலைவரான மல்லிகார்ஜூனா கார்கே, ”ராஜ்நாத் சிங் பூஜை செய்தது எல்லாம் நாடகம். காங்கிரஸ் ஆட்சியில் இதுபோன்று எதுவும் நடந்ததில்லை” என்று முன்பு விமர்சித்திருந்தார். இதற்கு முரண்பாடாக மற்றொரு காங்கிரஸ் தலைவரான சஞ்சய் நிருபம், ”சாஸ்த்ரா பூஜை நமது நாட்டின் பழைய பண்பாடு; கார்கே ஒரு நாத்திகவாதி என்பதனால் அவ்வாறு கூறுகிறார். காங்கிரஸிலிருக்கும் அனைவரும் நாத்திகவாதி கிடையாது” என்று கூறினார். இதனை மையப்படுத்தியே ராஜ்நாத் சிங் செய்தியாளர்களுக்கு அந்தப் பதிலை கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க: 'இருள் ராணி' உலகின் பணக்கார மாடல் யகிம் கட்வெக் கலக்கல் புகைப்படம்