நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, முதலமைச்சராக தனக்கு விருப்பமில்லை கட்சித் தலைவராக இருக்கவே விரும்புகிறேன் என அவர் தெரிவித்தார்.
மேலும், நேர்மையும், திறமையும் ஒருங்கே அமையப்பெற்ற தன்னம்பிக்கையுள்ள படித்த சுயமரியாதையுள்ள ஒரு இளைஞரை (அவர் பெண்ணாகக் கூட இருக்கலாம்) முதலமைச்சர் பதவியில் அமரவைப்பேன் எனவும் ரஜினி தெரிவித்தார்.
இதனிடையே, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் சிதம்பரம் மக்களவைத் தொகுதி உறுப்பினருமான தொல்.திருமாவளவன் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.
ரஜினியின் கருத்து குறித்து அவர் கூறுகையில், "அரசியலுக்கும் வரப்போவதில்லை, கட்சியும் தொடங்கப்போவதில்லை என்பதை ரஜினி இன்றைய பேட்டியின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார். அதே நேரத்தில் கட்சி தொடங்கினால் ஆட்சியை பிடிக்க வேண்டுமென்ற ரஜினியின் உளவியல் இதில் வெளிப்பட்டுள்ளது.
அனைத்தையும் சரி செய்த பின்னர் அரசியலுக்கு வர வேண்டுமென்றால் யாராலும் அரசியலுக்கு வர முடியாது. மக்களுக்கு நல்லது செய்ய வயது, களம் தேவையில்லை. சிஸ்டம் சரி இல்லை என்றால் அதை சரி செய்ய வேண்டுமே தவிர அதை மற்றவர் சரி செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கக்கூடாது" என்றார்.
தமிழ்நாடு பாஜக தலைவராக தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணை தலைவர் நியமிக்கப்பட்டிருப்பது தொடர்பாக பதிலளித்த அவர், "தேசிய அளவிலும், மாநில அளவிலும் பாஜகவிற்கு தலைவர் இருந்திருக்கின்றனர். தலித்துகளை கவர்வதற்காக முருகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பாஜகவின் இந்த நிலைப்பாட்டை விட முருகன் இந்த நிலைக்கு உயர்ந்துள்ளதற்கு வாழ்த்துகள். பதவி கிடைத்தாலும் சனாதானத்தின் முகம் என்றும் மாறப்போவதில்லை" என்றார்.
இதையும் படிங்க: ‘எழுச்சி தெரியட்டும்; அப்போது வருகிறேன்’ - அரசியல் வருகை குறித்து ரஜினிகாந்த் பேச்சு