நடிகர் ரஜினிகாந்த் ரத்த அழுத்தம் மாறுபாடு காரணமாக ஹைதராபாத்திலுள்ள அப்போலோ மருத்துவமனையில் நேற்று (டிசம்பர் 25) அனுமதிக்கப்பட்டார். அவரின் உடல்நிலையை மருத்துவக் குழுவினர் தொடர்ந்து கண்காணித்துவருகின்றனர். ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்து அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்து அறிக்கை வெளியிட்டுவருகிறது.
டிஸ்சார்ஜ் எப்போது?
இந்நிலையில் இன்று காலை அவரின் உடல்நிலை குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் "ரஜினிகாந்தின் உடல்நிலையில் தற்போது நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதுவரை மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனைகளில் கவலைப்படும்படி ஏதுமில்லை. இருப்பினும் தொடர்ந்து தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டுவருகிறார்.
ரஜினிக்குத் தொடர்ந்து ஓய்வு தேவை என்பதால் அவரைப் பார்க்க யாருக்கு அனுமதியளிக்கப்படவில்லை. ரத்த அழுத்த மாறுபாடு, நேற்று இருந்ததைவிட இன்று கட்டுப்பாட்டுக்குள் உள்ளதால் டிஸ்சார்ஜ் செய்வது குறித்து இன்று (டிசம்பர் 26) மாலை முடிவுசெய்யப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அரசியலில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ள ரஜினிகாந்த், தன்னுடைய அரசியல் கட்சி ஜனவரி மாதம் எந்த தேதியில் தொடங்கப்படும் என்று டிசம்பர் 31ஆம் தேதி அறிவிக்கப்போவதாகக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை, தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி, அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஆகியோர் ரஜினிகாந்த் உடல்நலம் குறித்து விசாரித்தனர்.