1999ஆம் ஆண்டு இனிப்புக் கடையொன்றில் வேலையை முடித்துவிட்டு கிளம்பிய, ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பைஜ்நாத் குப்தா, வழக்கம் போல வீடு திரும்பவில்லை.
இதையடுத்து, அவரது குடும்பத்தார் பல இடங்களில் பைஜ்நாத்தைத் தேடியுள்ளனர். எனினும் அவர் கிடைக்கவில்லை. இந்நிலையில், பல வருடங்களுக்கு பின் 'அப்னா கர்’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் மீண்டும் குடும்பத்தை சந்தித்துள்ளார் பைஜ்நாத்.
இது குறித்து அப்னா கர் தொண்டு நிறுவனத்தின் இணை நிறுவனர் பி.எம். பரத்வாஜ் கூறுகையில், “நாங்கள் கடந்த வருடம் பைஜ்நாத்தைப் பார்க்கும்போது, சாலையோரத்தில் காயங்களோடு விழுந்து கிடந்தார்.
அவரை மீட்டு ஆசிரமத்தில் சேர்த்து எட்டு மாதங்களாகச் சிகிச்சையளித்தோம்” என்றார். பைஜ்நாத்தை தேடி, பல வருடங்களைத் கழித்தவர் மகன் அவ்தேஷ். அவர் பேசுகையில்,” 1999ஆம் ஆண்டு அவரது 22 வயதில் எங்களைப் பிரிந்தார்.
அப்போது நானும் என் சகோதரியும் சின்னக் குழந்தைகளாக இருந்தோம். இத்தனை வருடங்களாக அவரைத் தேடிக் கொண்டிருந்தோம். தற்போது எனது சகோதரிக்கு திருமண ஏற்பாடு செய்துள்ளோம்.
அப்பாவும் வீடு திரும்பியுள்ளார். எல்லா சுபநிகழ்ச்சிகளை விடவும் இது எங்களுக்கு சிறப்பானதாக இருக்கும்” எனத் தெரிவித்தார்.
ராஜஸ்தானிலுள்ள குக்கிராமத்திலிருந்து தொலைந்த நபர், 21 ஆண்டுகளுக்கு பின்னர் குடும்பத்துடன் இணைந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க: டெல்லி வன்முறை பாதித்த பகுதிகளைப் பார்வையிட காங்கிரஸ் குழு அமைப்பு!