ஜெய்ப்பூர் : திரைப்படங்களில் வரும் பாடல்களிலும், தங்களுக்கு இடையேயான உரையாடல்களின்போதும், தாங்கள் வடிக்கும் கவிதைகளிலும், தங்களது காதலியை நிலவில் குடியேற ஆவன செய்வதாக காதலர்கள் குறிப்பிடுவர். ஆனால், ராஜஸ்தானைச் சேர்ந்த ஒருவர் அந்த வரிகள் அனைத்தையும் உண்மையாகவே மாற்றி உலக மக்களை உற்று நோக்கச் செய்துள்ளார்.
ஆம். ராஜஸ்தானைச் சேர்ந்த தர்மேந்திர அஜினா என்பவர் தனது காதல் மனைவிக்கு திருமண நாள் பரிசாக நிலவில் இடம் வாங்கி அசத்தியுள்ளார். இந்த அன்புப் பரிசை பெற்ற மகிழ்ச்சியிலிருந்து வெளிவராமல் உள்ளார் அவரது மனைவி சப்னா அனிஜா.
இதுகுறித்து தேர்மேந்திர அனிஜா கூறுகையில், ”கடந்த டிசம்பர் 24ஆம் தேதி நாங்கள் எங்களது எட்டாம் ஆண்டு திருமண நாளைக் கொண்டாடினோம். எங்களது திருமண நாள் விழாவில் எனது மனைவிக்கு புதிதாக எதையாவது பரிசளிக்க விரும்பினேன். வழக்கமாக அனைவரும் நகைகள், கார் உள்ளிட்ட வாகனங்களையே பரிசளிப்பர். ஆனால் நான் அவற்றை மாற்ற முயற்சித்தேன். அதனால் தான் நான் என் மனைவிக்காக நிலவில் இடம் வாங்கி, அதனைப் பரிசளித்தேன். இதன் காரணமாக என் மனைவி மட்டுமல்ல, நானும் மகிழ்ச்சியடைகிறேன். ஏனெனில் நிலவில் நிலம் வாங்கிய ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த முதல் நபர் நான்தான்" என்றார்.
தர்மேந்திர சிங், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ’லூனார் சொசைட்டி இன்டர்நேஷனல்’ என்ற நிறுவனம் மூலம் நிலவில் இடம் வாங்கியுள்ளார். இதற்காக இவர் ஒரு வருடமாக முயற்சி செய்துள்ளார்,
தர்மேந்திராவின் மனைவி சப்னா கூறுகையில், "தனது கணவரிடமிருந்து ’பூமிக்கு வெளியிலிருந்து’ இதுபோன்ற ஒரு சிறப்பு பரிசைப் பெறுவேன் என்று ஒருபோதும் நான் எதிர்பார்க்கவில்லை. நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். திருமண நாள் விழாவின்போது அவர் இந்தப் பரிசை எனக்கு அளிக்கும்போது நாங்கள் உண்மையில் நிலவில் இருப்பதைப் போல உணர்ந்தோம்" என சிலாகித்தார்.
எது எப்படியோ, இனி இந்த செய்தியைக் கொண்டு மீம் கிரியேட்டர்கள் குறைந்தபட்சம் ஒரு வாரத்திற்காவது இணையத்தில் வலம் வருவர் என்பது நிச்சயம்.
இதையும் படிங்க: விவசாயிகளிடமிருந்து ஆக்கிரமிக்கப்பட்ட நிலம் மீட்கப்படும் - மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்