ராஜஸ்தான் மாநிலம் ஜாலூர் மாவட்டத்தில் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 10 நாள்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். ஆனால் மாநில அரசு அதற்கு செவி சாய்க்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் ஹோலி தினத்தன்று சமாதி போல் குழி தோண்டி தங்களது உடலை மண்ணில் புதைத்துக் கொண்டு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆறு பெண்கள் உட்பட 22 விவசாயிகள் சமாதி போராட்டத்திலும், 221 விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
பின்னர் இது குறித்து விவசாயி கன்வீனர் ராம்பேஷ் தலால் கூறுகையில், " நாடு முழுவதும் ஹோலி கொண்டாடப்பட்டபோது, ராஜஸ்தானில் விவசாயிகள் நில சமாதியில் அமர்ந்து உண்ணாவிரதம் இருந்து மாநில அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியதன் மூலம் நிறமற்ற ஹோலியை கொண்டாடினர்.
ஜெய்ப்பூர் மேம்பாட்டு ஆணையம் (ஜே.டி.ஏ), 600 விவசாய நிலங்களை விவசாயிகளிடமிருந்து கையகப்படுத்தியது. அதற்கு இழப்பீடாக நீதிமன்றத்தில் ரூ. 60 கோடி டெபாசிட் செய்தது. இது தற்போதைய சந்தை விலையுடன் பொருந்தாது என்றும் தங்களுக்கு நிலம்தான் எல்லாமே என்று கிராம மக்கள் அதை ஏற்க மறுத்துவிட்டனர்.
ஆனால் வளர்ச்சி என்ற பெயரில் நெடுஞ்சாலை அமைக்க அரசு நிலத்தை கையகப்படுத்துவதன் மூலம் நாங்கள் நிலமற்றவர்களாக மாற்றப்பட்டுள்ளோம். தேசிய நெடுஞ்சாலை - 69 இருக்கின்றபோது தங்கள் நிலம் ஏன் வீணடிக்கப்படுகிறது. பாரத்மாலா திட்டத்தின் கீழ் அதிவேக நெடுஞ்சாலை அமைப்பதற்காக, கணக்கெடுப்பு பணிகள் முடிந்த ஸ்ரீகங்கன்நகர், ஹனுமன்கர், பிகானேர், பார்மர் உள்ளிட்ட கிராம விவசாயிகளிடமிருந்து ஆயிரக்கணக்கான விவசாய நிலங்களை மத்திய அரசு கையகப்படுத்தியுள்ளது.
அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. மார்ச் 16ஆம் தேதிக்குள் விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், நாடு முழுவதிலுமிருந்து ஐந்து லட்சம் விவசாயிகள் ஜலூரில் கூடுவார்கள்” என்றார்.
இதையும் படிங்க:ஜார்க்கண்ட்டில் பட்டினி சாவு?