ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சராக அசோக் கெலாட் இருந்து வருகிறார். துணை முதலமைச்சராக சச்சின் பைலட் இருந்து வருகிறார். இந்நிலையில் சச்சின் பைலட்டுக்கும் முதலமைச்சரான அசோக் கெலாட்டுக்குமிடையே அதிகார மோதல் நீடித்து வருகிறது. அசோக் கெலாட்டின் நடவடிக்கையால் சச்சின் பைலட் அதிருப்தியடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
மாநிலங்களவைத் தேர்தலின்போது மத்தியப் பிரதேசத்தைப்போன்று ராஜஸ்தானிலும் பாஜக, காங்கிரஸ் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கும் முயற்சியில் ஈடுபடுவதாகப் புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், முதலமைச்சர் அசோக் கெலாட் 90க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்களை தனியார் தங்கும் விடுதிக்கு அழைத்துச் சென்றார். மாநிலங்களவைத் தேர்தல் முடிந்த பின்னரும் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்க பாஜக முயல்வதாக அசோக் கெலாட் குற்றம்சாட்டினார்.
இதனைத்தொடர்ந்து, சச்சின் பைலட் தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் டெல்லி சென்றுள்ளதாகவும், இதனால், காங்கிரஸ் ஆட்சிக்குச் சிக்கல் எழுந்துள்ளது எனவும் தகவல் வெளியானது.
இந்நிலையில், ராஜஸ்தான் காங்கிரஸ் பொறுப்பாளர் அவினாஷ் பாண்டே செய்தியாளர்களிடம் கூறியதாவது, "டெல்லி சென்ற எம்எல்ஏக்கள் ஜெய்ப்பூருக்கு வந்து கொண்டிருக்கின்றனர். ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசை கவிழ்க்க பாஜக போடும் சதித் திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது.
டெல்லி சென்ற காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். தற்போது 109 எம்எல்ஏக்கள் அசோக் கெலாட் தலைமையிலான ஆட்சிக்கு ஆதரவையும், நம்பிக்கையையும் தருவதாக கையெழுத்திட்டுள்ளனர். ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசுக்கு எவ்வித சிக்கலும் இல்லை" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அடுத்த விக்கெட்டை இழக்கும் காங்கிரஸ்?