இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 2.26 லட்சத்தைத் தாண்டியுள்ள நிலையில், இதுவரை 6 ஆயிரத்து 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக, ஒரு சில மாநிலங்களில் நோய் பாதிப்பு எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது.
அதன்படி மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி, குஜாராத் ஆகிய மாநிலங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ராஜஸ்தான் மாநிலத்திலும் எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
மாநிலம் முழுவதும் இதுவரை 10,084 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 218 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ராஜஸ்தான் கூடுதல் தலைமைச் செயலர் ரோஹித் குமார் சிங் தெரிவித்துள்ளார்.
மாநிலத் தலைநகரான ஜெய்பூரில் அதிகபட்சமாக 2,152 பேரும், அதற்கு அடுத்தப்படியாக ஜோத்பூரில் 1,706 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஊரடங்குக்குப் பின் வெளிமாநிலங்களிலிருந்து ஊர் திரும்பியவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததன் விளைவாகவே நோய்த் தொற்று அதிகரிப்பதாக ராஜஸ்தான் அரசு கவலை தெரிவித்துள்ளது. இருப்பினும், துரித நடவடிக்கை மூலம் தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: 5 நாள் உணவு, குடிநீர் மறுப்பு; மருத்துவமனையில் முதியவருக்கு நேர்ந்த கொடூரம்