நாட்டில் வெட்டுக்கிளி தாக்குதல் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கூட்டம் கூட்டமாக வரும் வெட்டுக்கிளிகளை தடுக்க முடியாமல் மத்திய, மாநில அரசுகள் திணறி வருகின்றன. ஒரு பகுதிக்குள் நுழைந்தால் சூறையாடமல் வெளியே செல்வது இல்லை. தற்போது, வட இந்திய மாநிலங்கள் தான் வெட்டுக்கிளிக்கு இரையாக சிக்கியுள்ளன.
இந்நிலையில், இந்திய வேளாண்மை மற்றும் உணவு அமைப்பு (AFO) வெளியிட்டுள்ள அறிக்கையில், "வெட்டுக்கிளியின் எந்தவொரு பெரிய தாக்குதலையும் சமாளிக்க வேளாண்மை மற்றும் உணவு அமைப்புத் தயாராகி வருகிறது. ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், பஞ்சாப், குஜராத் மாநிலங்களில் 2.75 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் வெட்டுக்கிளி கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ராஜஸ்தானில் பல மாவட்டங்களைத் தாக்கிய வெட்டுக்கிளி கூட்டம், அடுத்ததாக பார்மர் மாவட்டத்தை தாக்கவுள்ளது" என எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக பேசிய பார்மர் வேளாண் துணை இயக்குநர் டாக்டர் ஜே.ஆர்.பக்கர், "வெட்டுக்கிளி தாக்குதலை எதிர்த்துப் போராடுவதற்கு ஸ்ப்ரே வாகனங்கள், ட்ரோன்கள், டிராக்டரில் பொருத்தப்பட்ட தெளிப்பான்கள் ஆகியவற்றைக் கொண்ட கட்டுப்பாட்டு குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. மழைக்காலத்தில் தான் வெட்டுக்கிளிகள் தாக்க அதிக வாய்ப்புள்ளது. இதுமட்டுமின்றி, வெட்டுக்கிளி தாக்குதலைச் சமாளிக்க இரண்டு ஹெலிகாப்டர்களும் தயார் நிலையில் உள்ளன" என்றார்.
பாலைவன வெட்டுக்கிளி இனம், தங்களது பாதையில் சந்திக்கும் அனைத்தையும் அழித்துவிடும். பெரிய வெட்டுக்கிளிகளால் ஒரு நாளைக்கு 150 கிலோ மீட்டர் வரை, காற்றோடு இணைந்து பறக்க முடியும். இந்தத் திடீர் தாக்குதல் மில்லியன் கணக்கான மக்களின் மனதில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.