கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு பொது போக்குவரத்து முடக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், வெளி மாநிலத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பும் பொருட்டு மத்திய அரசு சிறப்பு ஷார்மிக் ரயில்களை இயக்கியது.
இதையடுத்து ஜூன் ஒன்றாம் தேதி முதல் 200 பயணிகள் ரயில்கள் இயக்கப்படும் என அறிவித்திருந்தது. இதற்கான முன்பதிவுகள் இணையம் மூலமாகவும், ரயில் நிலையங்களிலும் தொடங்கப்பட்டுள்ள நிலையில், ரயில்வே அமைச்சகம் சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
அதில், ஜூன் ஒன்றாம் தேதி முதல் இயக்கப்படவுள்ள பயணிகள் ரயில்களுக்கான முன்பதிவு காலம் 30 நாள்களிலிருந்து 120 நாள்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு பயணிகள் ரயிலில் பார்சல் அனுப்பவும் அனுமதி வழங்கப்படும். தற்போதுள்ள முன்பதிவு முறை, தட்கல் முறையில் பயணச் சீட்டிற்கான இடங்களை ஒதுக்குதல் உள்ளிட்ட விதிமுறைகள் வழக்கமான முறையிலேயே இருக்கும் என தெரிவித்துள்ளது.
அறிவிக்கப்பட்டுள்ள இந்த மாற்றங்கள் அனைத்தும் வரும் மே 31ஆம் தேதி காலை எட்டு மணி முதல் அமல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஜூன் 1 முதல் மதுரையிலிருந்து திருச்சி, விழுப்புரத்திற்கு ரயில்கள்!